October 20, 2020
  • October 20, 2020
Breaking News
December 24, 2019

சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்

By 0 572 Views

தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார்.

காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை.

இந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு ‘பருவ’ காதல் கதைகளை.

அதில் பருவம் வராத பதின்பருவ காதலையும், பருவம் தொட்ட ஒரு முதிர்வுக் காதலையும், கல்யாண பந்தத்துக்குள் விழுந்து காதலை இனம் காணும் ஒரு நடுத்தரக் காதலையும், அன்பு மட்டுமே ஆதாரம் என்று புரிந்துகொள்ளும் ஒரு வயதான காதலையும் அழகான மாலையாக கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழில் அதிகம் சொல்லப்படாத ஆந்தாலஜி தளத்தில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

குப்பைமேட்டில் காகிதம் பொறுக்கும் குப்பத்து சிறுவனுக்கும், ஈசிஆர் ரோடு கோடீஸ்வர சிறுமிக்கும் காதல் அரும்புவது இயல்பில் சாத்தியமே இல்லாத ஒரு விஷயம். அது காதல்தானா என்று புரிந்து கொள்வதற்குள் கதை முடிந்து விடுகிறது.

இந்தப் ‘பிங்க் பேக்’ கதையை வெறும் காதல் கதை என்று கடந்து போய்விட முடியாது. ஏழைகளுக்கு உள்ளிருக்கும் ஈரத்தையும் செல்வந்தர் வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவள் மனதிலும் துளிர்க்கும் நேசத்தையும் கேழ்வரகுக் களி மீது செர்ரிப்பழம் வைத்ததுபோல் நேர்த்தியாக சொல்லிவிட்டுப் போகிறது இந்த எபிசோட்.

இரண்டாவது காதல் இன்னும் விசித்திரமானது. தமிழ் சினிமாவில் புற்றுநோய் ஒன்றும் புதிய விஷயமில்லை. ஆனால் அது எங்கே வருகிறது என்பது இந்தப் படத்தின் புதுமை. அப்படி ‘விரை’யில் புற்று நோய்க் கட்டி வந்த ஒரு வாலிபனுக்கு விரட்டிக் கொண்டு ஒரு காதல் வரும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

“கட்டி’ வந்தவனுக்கு யாரும் பொண்ணை கட்டிப் கொடுப்பார்களா..?” என்று நிச்சயித்த பெண் அவனை உதறித் தள்ளி விலகுவதும், அந்த கட்டிக்கு சிகிச்சைக்காக போகும் பயண வாகனமே ஒரு காதல் வாகனமாக மாறி இன்னொரு பெண் வழித் துணையாவதும் அந்த இளைஞனின் வாழ்வில் நேர்ந்த இரு ஆச்சரிய துருவங்கள்.

அறுவை சிகிச்சை முடிந்து படுத்திருப்பவனிடம் அவள் தன் காதலைச்சொல்ல “எனக்கு ஒரு Ball தான் இருக்கு…” என்று அவன் சொல்ல, “ஒரு Ball-லதானே உலகமே சுத்துது…” என்று அவன் பிரச்சினைக்கு அவள் முற்றுப்புள்ளி வைப்பது ‘அட’ போட வைக்கும் அடல்ட் சிந்தனை..!

மூன்றாவது எபிசோடில் காதல் இன்னும் தூக்கல். திருமண பந்தத்துக்குள் வழக்கம்போல் வந்து விழுந்து மூன்று குழந்தைகள் பெற்று, மூன்றும் தூங்கிய பிறகு பக்கத்து அறைக்குச்சென்று படுக்கையைப் பகிர்ந்து காலையில் இயந்திரங்களாக மாறிக்கொள்ளும் கலிகால வாழ்வில் ‘அலெக்ஸா’ என்ற ஒரு இயந்திரத்தின் துணையுடன் காதலைக் கண்டுபிடிக்கிறார்கள் ஒரு நடுத்தர வயது தம்பதி.

அதில் இடம்பெறும் சமுத்திரக்கனியும், சுனைனாவும் இதுவரை நடித்த படங்களில் இதில்தான் முழுமை பெற்றிருக்கிறார்கள். முகத்தில் அறையும்படி பேசிவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டுப் போகும் கணவனை எதிர்த்து இயலாமையில் ஒரு பார்வை பார்க்கிறாரே சுனைனா… அதுவும், முதல்முறை கணவன் “ஐ லவ் யூ..” சொல்ல, தடுமாறி செல்போனை குழம்புக்குள் போடுகிறாரே அதுவும் ‘ஆஸம்…’ அதேபோல் மனைவியிடம் வீம்புக்கு “இந்த ஆறு இஞ்ச் முடியைப் பாக்கலேங்கிறதுதான் உன் கோபமா… அதான் உன் முடியை தினமும் சாப்பாட்டுல பாக்கிறேனே..? எனக்குக் கூட வழுக்கை விழுந்திடுச்சு… நீ பாத்தியா..?” என்று பொங்கினாலும் அதில் தோல்விக்கான முத்திரையே சமுத்திரக்கனியிடம் தெரிவது அவர் நடிப்புக்கு ‘வெற்றி..!”

வாழ்க்கை முடித்து வைக்க வருடங்களை எண்ணிக்கொண்டிருக்க.. குடும்பத்தினர் வெகேஷன் போயிருக்கும் இடைவெளியில் மருத்துவமனையில் ‘ரொடீன் செக்கப்’பில் வைத்து தனிமையில் வசிக்கும் மூதாட்டியுடன் ‘அஃபேர்’ வரும் சீனியர் சிட்டிசனின் காதலும் சீனிக்கட்டிதான்..! ‘ஆமை வாழக்கை’தான் நல்லது என்று வயோதிகத்தில் அவர்களுக்குப் புரிய வருவது நெகிழ வைக்கிறது. அதற்காக, ஆயாவை தாத்தா அலேக்காகத் தூக்கிச் செல்வது ‘ஓவர் ஆக்‌ஷன்..!’ 

இந்த நான்கு கதைகளிலுமே காதலுக்குத் தூதாக ஆவது தோழனோ, தோழியரோ அல்ல… ஒரு குப்பைக் கவர், ஷேர் டாக்ஸி, அலெக்ஸா ஸ்பீக்கர், ‘டர்ட்டிள் வாக்’ எனப்படும் ‘ஆமை நடை’… இத்துடன் நவீன காலத்துக்கான ‘அப்டேஷன்’களாக மீம்ஸ் கிரியேஷன், ஃபேஷன் டிசைனிங் என்று  ஹலிதாவின் கற்பனை காலக் குறியீடுகளாகவும் ஆகி ஷேக்ஸ்பியர் கால சிந்தனைகளை ‘ஓவர்டேக்’ செய்திருக்கிறது. 

தொடர்பில்லாத நான்கு கதைகளில் ஒவ்வொரு எபிசோடுக்குள்ளும் இன்னொரு கதையின் பாத்திரம் வந்து போவதும் இனிமையான ‘ஹைக்கூ’ முயற்சி..!

பிரதீப் குமாரின் பாடல்கள் இல்லாத பின்னணி இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் நீரில் ஒளிரும் நிலவு சுகம்..!

படத்தின் ஒரே குறை, வெப்சீரீஸ் போன்று மெதுவாகக் கதை செல்வது. அதுவே படம் நெடுக விரியும் சுவாரஸ்யங்களைக் குறைக்கிறது. அதை கொஞ்சம் ‘சிசர்’ போட்டு 15 நிமிடங்களைத் தூக்கினால் இந்த உலக முயற்சிப்படம் உள்ளூர் ரசனைக்கும் ஒத்து வரும்..!

இருந்தும்… குப்பை மலையாக விரியும் முதல் காட்சியில் தொடங்கும் படம் காதலின் சூறாவளியில் இப்படி மனதை குப்பையாக்கி முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

வெல்டன் ஹலிதா..!

சில்லுக் கருப்பட்டி – சிலிர்க்க வைக்கும் இனிப்பு..!

– வேணுஜி