November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கமல் ரஜினிக்கு தேவை பணம் எனக்குத் தேவை இனம் – சீமான்
February 23, 2019

கமல் ரஜினிக்கு தேவை பணம் எனக்குத் தேவை இனம் – சீமான்

By 0 920 Views

‘தம்பி திரைக்களம்’ மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை இன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் அமீர், மீரா கதிரவன், ஜெகன்னாத், ’டோரா’ தாஸ், கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறோம் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாரா தான்..!” என்றார்.

செந்தமிழன் சீமான் பேசும்போது, “இது தமிழ் தலைப்பு அல்ல தான்.. ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் ‘அமீரா’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். அமீரா தான் மையக்கரு. நாங்கள் இருவரும் அவரை நோக்கி செல்லும் கதாபாத்திரங்கள்தான். அதேசமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் விறுவிறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

AMEERA POOJA

AMEERA POOJA

அரசியலை கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களை செலவிடுகிறீர்களே என்கிறார்கள்… எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது… மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்கு செலவிடுகிறேன். அவ்வளவுதான்.

சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுகிறது இஸ்லாம் தீவிரவாதம் என்பது ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு.. அதேசமயம் எல்லா மதங்களும் நன்னெறியைத் தான் போதிக்கின்றன. இது ஒரு சமூக அக்கறை உள்ள படம்தான்.. இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறைதானே..?

திரையில் தோன்றுவது எவ்வளவு அவசியம் என்று இயக்குநர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் எனக்கு போதித்துள்ளார்கள். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத்தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அதற்காக எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துவிட முடியாது.

எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன்மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் நடிப்பதில் தவறில்லை. திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. திரைக்கலை என்பது ஒரு தீக்குச்சி போல.. இதை நீங்கள் என்னவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள். நான் அதற்கு தேவைப்படவும் மாட்டேன்.

நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களை சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு.

கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா..? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? ரஜினிகாந்த்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்..? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன், ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதலமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

நான் அப்படி இல்லை. கட்சி தொடங்கி எட்டு வருடமாக மக்களுக்காக போராடி வருகிறேன். இதில் ஒன்றரை வருடம் சிறையிலேயே இருந்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் நான் இனத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன். அதனால் என்னை சினிமா நடிகர் என்கிற பார்வையில் பார்க்க முடியாது. சினிமாவில் நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகி விடும் என்பதைத்தான் நாங்கள் வெறுக்கிறோம்.

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என, தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா..? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்குப் பெயர்தான் தலைவன்..

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. யார் தீர்ப்பார்கள் என வெளிப்படையாக சொல்ல வேண்டும்.. யாரோ ஒருவர் பக்கம் கைகாட்ட வேண்டும். நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு. அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம்.

மேடையில் பேசுவது போல சினிமாவும் ஒரு தளம். மேடையில் என்ன பேசுகிறேனோ அதே கருத்தை திரையில் பேசுகிறேன். அவ்வளவுதான். நான் அங்கங்கே மேடையில் பேசிய ஒரு சில விஷயங்கள் திரையில் வரும்போது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கிறீர்கள்.

அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.. அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன்படுத்துகிறேன்.

Anu Sithara

Anu Sithara

பெரிய திரை மட்டுமல்ல, சின்னத்திரையும் இன்று தேவைப்படுகிறது.. யூ டியூப் என்ற ஒன்று இல்லை என்றால் நான் எப்போதோ இறந்து விட்டேன் என்றும், அடக்கம் பண்ணி ஆகிவிட்டது என்றும் சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு வலிமையான ஊடகம் தான். ஆக, திரை என்பது எல்லோருக்கும், ஏன் நாட்டின் பிரதமருக்கு கூட தேவைப்படுகிறது. பிரதமரையோ முதல்வரையோ பேட்டி கொடுக்காமல் இருக்கச் சொல்லுங்கள். நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம்.

தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள்.. நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்..? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்..? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா..? இல்லை. வெறும் நோட்டணி… சீட்டணி… என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள். தனியாக நின்று விட்டுப் போகிறேன்.

இதோ இங்கே காவல் தெய்வமாக இந்த முனியப்பசாமி இருப்பது போல, நானும் ஒரு சாமியாக நின்று விட்டுப் போகிறேன். இந்தியா மக்களுக்கான தேசமா..? இது ஒரு சந்தை பகுதியாக மாறிவிட்டது. இங்கே வியாபாரம் நடக்குமா..? வாழ்க்கை நடக்குமா..? நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியில் 100 விழுக்காடு அன்னிய முதலீடு இருக்கிறது. இதில் எங்கே ரகசியம் காக்க முடியும்?

தமிழக அரசு 2௦௦௦ ரூபாயும் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாயும் தருகிறது. இதை வேண்டாம் என ஒதுக்கும் நிலையில் நம் மக்களை அவர்கள் வைக்கவில்லையே..? நல்லாட்சி கொடுத்திருந்தால் இப்படி பணம் கொடுக்கத் தேவை இல்லையே. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் அந்த இழிநிலைக்கு மாற்றியது யார்..?” என பட தகவல்களுடன் அரசியலையும் ஒரு பிடி பிடித்தார் சீமான்.