தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு சீக்வல் படம் என்பது புரிந்துவிடும். ஆக இதற்கு முன் இதே வரிசையில் இரு படங்கள் வந்திருக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை அல்லது தேவைப்பட்டால் சொல்லலாம்.
ஆனால் முன்னவற்றைப் பார்க்காமல் தனியாகப் பார்த்தாலும் இது ஒரு மர்டர் மிஸ்டரி படமாக ரசிக்கும் விதமாக இதனைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி.
இன்ஸ்பெக்டர் சீதாராம் இதில் வினோதமான தொடர் கொலைகளைச் சந்திக்கிறார். சற்றே வயது முதிர்ந்தவர்கள் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டு பின் கொல்லப்படுகிறார்கள். அப்படி கொடூரமாக அவர்கள் காயப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது கொல்வது மட்டுமே கொலையாளியின் நோக்கம் இல்லை என்பதும் கொலையாளி உளவியல் சிக்கல் உள்ளவன் என்பதும் புரிகிறது.
கிடைக்கும் சாட்சியங்களையெல்லாம் வைத்து தன்னுடைய அனுபவத்தையும் கலந்து விசாரணையில் முன்னேறினாலும் ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்திக்கிறார் சீதாராம்.
கடைசியில் யார் அந்த கொலையாளி..? இப்படி ஒரு குறிப்பிட்ட வயதினரை தாக்கிக் கொல்வதன் காரணம் என்ன என்பதுதான் முடிவாக இருக்கும் இல்லையா..?
அதேதான். ஆனால் அதற்கான காரணம் மட்டும் சற்றே வித்தியாசமானது.
இன்ஸ்பெக்டர் சீதாராம் வேடத்தில் நடித்திருக்கும் விஜய ராகவேந்திரா, வழக்கமான போலீஸ் ஸ்டோரிகளில் வரும் சூப்பர் ஹீரோக்கள் போன்று ஸ்டைலாகத் தோற்றமளிக்காமல் நாம் இயல்பாக பார்க்கும் ஒரு காவல் அதிகாரி எப்படி விசாரணை நடத்துவாரோ அந்த உடல் மொழியில் நடித்திருப்பது கவனத்தைக் கவர்கிறது.
அதனால் இது படம் என்பதையும் மறந்து அவருடன் நாம் பயணப்பட ஆரம்பிக்கிறோம்.
அவருக்கு அடுத்து கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் வித்தியாசமான பாத்திரப் படைப்பையும் அவரது நடிப்பாற்றலையும் சொல்ல வேண்டும்.
விஜயராகவேந்திராவின் சகோதரியாக நடித்திருக்கும் உஷா பண்டாரியின் மீட்டருக்கு மிகாத நடிப்பும் சிறப்பு.
ஒரு விசாரணை படத்துக்குரிய நோக்கத்துடன் கவனமாக நகர்கிறது ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் கேமரா கோணங்கள். கலரிங்கும் கச்சிதம்..!
இரைச்சல் மட்டுமே இசை அல்ல நிசப்தமும் கூட இசைதான் என்பதை இசைஞானியின் இசையில் நாம் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் நவநீத் ஷாமியின் இசை மிக கவனமாக கடத்தப்பட்டிருக்கிறது.
கதையாக கேட்பதற்கு வழக்கமான மர்டர் மிஸ்டரி படம் போல தோன்றினாலும் ஒரு போலீஸ் விசாரணையின் அனுபவத்தை நமக்கு நேரடியாகத் தரும் இந்த படம் சற்று வித்தியாசமானதுதான்.
அத்துடன் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு முகப்பட்டு வேலை பார்த்திருப்பதில் இருந்து இந்த பட இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டியின் திறமையை புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான் யார் கொலையாளி என்பதும் கொலைக்கான காரணமும் பெரிய அளவில் வலுவில்லாமல் இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை நாம் பெற முடிகிறது.
நீண்ட நாள் கழித்து ஒரு உருப்படியான போலீஸ் ஸ்டோரியைக் கண்டுகளித்த அனுபவம்.
செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் – இந்த அப்பாக்களே இப்படித்தான்..!
– வேணுஜி