தமிழ் படங்களில் அனேகமாக இயக்குனர் ராமநாராயணன் மறைவுக்குப்பின் சிவப்பு சிந்தனை உள்ள படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.
அந்த குறையை போக்க வந்திருக்கிறது இந்த சங்க தலைவன் படம். இதன் களமாக நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நெசவுத் தொழில் முக்கியத்துவம் பெற்ற ஊரில் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடுகிரார் சிவப்பு சிந்தனை உள்ள சமுத்திரக்கனி.
இன்னொரு பக்கம் சொந்தத்தில் நெசவு மில் நடத்தும் ராமதாஸின் மகனாக இருந்தும் மாரிமுத்து நடத்தி வரும் மில்லில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ்.
அடங்க மறுக்கும் சமுத்திரக்கனிக்கும் அடங்கிப் போக நினைக்கும் கருணாசுக்கும் ஏற்படும் தொடர்பு எப்படி தொழிலாளர்களின் உயர்வுக்கு உதவுகிறது என்பதே படத்தின் கதை.
கருணாஸ் வேலை பார்க்கும் மில்லில் வேலை செய்து வரும் பெண்ணுக்கு விபத்தில் கை துண்டாகிறது. இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மில் முதலாளி மாரிமுத்து. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சமுத்திரக்கனி, போராடி நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கிறார்.
இந்த சம்பவத்தின் மூலம் பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடு ஏற்படும் கருணாஸ் எப்படி தொழிலாளர்களின் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் அளவுக்கு வளர்கிறார் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். இதற்கு அவருக்கு உதவி இருப்பது இரா.பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்ற நாவல்.
படத்தின் விளம்பரங்களில் எல்லாம் சமுத்திரக்கனி ஹீரோவாக முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்க படம் பார்க்கும் நமக்கு எழும் சந்தேகம் இந்தப் படத்தின் ஹீரோ சமுத்திரக்கனியா அல்லது கருணாஸா என்பதே
நகைச்சுவை பாத்திரங்களில் அறியப்பட்ட கருணாஸ், இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து நெகிழ வைத்த இருக்கிறார். அங்கங்கே காமெடி இருந்தாலும் அப்பாவித்தனமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
சங்கத்தலைவனாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. பொதுவுடைமை சித்தாந்தத்தை அவர் சொல்ல சொல்ல கருணாசுக்கு மட்டுமல்ல நமக்குமே நரம்பு புடைத்து கம்யூனிசத்தின் மேல் அதிக ஈடுபாடு வருகிறது.
சமுத்திரகனியின் மனைவியாக வரும் ரம்யாவின் நடிப்பு கிராமத்து பெண்ணாகக் கவர்ந்தாலும் அவரது வனப்பு அந்த பாத்திரத்திற்கு இடையூறு செய்கிறது.
கருணாஸை காதலிக்கும் சுனு லட்சுமி சிறப்பாக நடித்திருந்தாலும், அவர் கருணாசை காதலிப்பதற்கான பலமான காரணம் எதுவும் இல்லை.
மில் முதலாளி மாரிமுத்துவின் நடிப்பு முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
படம் முழுவதும் பொது உடமையும் போராட்டமும் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தாலும் கடைசியில் மாரிமுத்து கொல்லப்படுவது அந்தக் கொள்கைகளுக்கு எதிராகவே இருக்கிறது.
முதல் பாதியில் இருக்கும் நோக்கம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். படத்தின் வசனங்கள் பாராட்ட வைக்கின்றன.
ராபர்ட் சற்குணத்தின் இசையும், ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவும் ஓகே.
இதுபோன்ற மக்களுக்கான படங்களுக்கு மக்களே ஆதரவு தருவதில்லை என்பதுதான் சமுதாயத்தில் பெரிய குறை.
சங்கத்தலைவன் – கண் சிவந்தால் மண் சிவக்கும்..!
Related