அமானுஷ்யமாக ஆரம்பிக்கிறது படம். நாயகி சாக்ஷி அகர்வாலின் எதிர்வரும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் குடும்பத்தினர் காட்டுக்குள் நள்ளிரவில் நடத்தும் கருப்பன் பூஜையில் உரு மாறும் பூசாரி அவர்கள் குடும்பத்தையே கொன்று குவிக்கிறார்.
பிறகுதான் தெரிகிறது அது சாக்ஷி அகர்வாலுக்கு வந்த கனவு என்று. ஆனால் உண்மையிலேயே அவர் விஜய் விஷ்வா மீது காதல் கொண்டு திருமணமும் நிச்சயமாகி அது நடக்கவிருக்கும் தருணத்தில் இப்படி ஒரு கனவு வந்தது மனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல் அவர் பொறியாளராக இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் சித்தாளாக இருக்கும் செல்லக்குட்டிதான் அவரது பால்ய சிநேகிதன் என்பதும் தெரிகிறது.
முதல் பாதி வரை இந்த புரிதல்கள் எல்லாம் நடந்து முடிய இரண்டாவது பாதியில் அப்படியே தலைகீழாகிறது கதை.
செல்லக்குட்டியின் அம்மா அம்பிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தன் பால்ய சினேகிதி சாக்ஷி அகர்வால் பற்றி மகன் சொல்வதைக் கேட்டு அவளையே நீ திருமணம் முடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவிக்கிறார் அம்பிகா. ஆனால் அதை மறுக்கிறார் சாக்ஷி.
சாக்ஷி அந்த திருமணத்திற்கு சம்மதித்தால் மட்டுமே அம்மா உயிர் பிழைப்பார் என்கிற நிலையில் செல்லக்குட்டி எடுக்கும் அதிரடி முடிவுகள்தான் இரண்டாவது பாதியை ரணகளம் ஆக்குகின்றன.
சாராவாக வரும் சாக்ஷி அகர்வால் மீதுதான் கதையே செல்கிறது. அவரை புடவையில்… மாடர்ன் உடைகளில்… கடைசியாக கிளாமராக டூ பீசில்… என்று கதையோட்டத்திலேயே உடைகள் வருமாறு செய்துள்ளார் இயக்குனருமான செல்லக்குட்டி.
தனது எல்லைக்குள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஒன்றி நடித்திருக்கிறார் சாக்ஷி.
முதல் பாதியை பார்க்கும்போது விஜய் விஷ்வாதான் ஹீரோ என்பது போல தெரியும். ஆனால் இரண்டாவது பாதியில் அவரை ஓவர் டேக செய்து இயக்குனர் செல்லக்குட்டி ஹீரோ ஆகிறார்.
ஆனால் அவர் நடிப்பு..? 10 டி.ராஜேந்தர், 5 எஸ். ஜே.சூர்யா கலந்து செய்தது போல்… அப்படி ஒரு ராட்சச நடிப்பு. ஆரம்பத்தில் நமக்கு அவர் நடிப்பை பார்க்கும் போது எரிச்சல் ஏற்பட… போகப் போக அதை ரசிக்கவே ஆரம்பித்து விடுகிறோம்.
அதிலும் அவர் பள்ளி மாணவனாக வரும் காட்சிகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பு வரும் ரகம்.
அவரது அம்மாவாக வரும் அம்பிகா மரணப்படுக்கையில் கூட ஃபுல் மேக்கப்பில் பளிச்சென்று இருக்கிறார்.
கட்டுமான காவலாளியாக வரும் ரோபோ சங்கரின் இரட்டை அர்த்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை அல்ல.
எப்படியோ யோகி பாபுவின் கால் சீட்டை வாங்கியதில் படத்தின் தரம் கூடி இருக்கிறது. ஆனால் அவர் நகைச்சுவையும் பெரிதாக எடுபடவில்லை.
படத்தின் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் படத்தின் பட்ஜெட் பழுது படாமல் பணியாற்றியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் இயக்குனர் செல்லக்குட்டி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்காக நட்பு, காதல், செண்டிமெண்ட் என்று எல்லா தளங்களிலும் புகுந்து விளையாடவே இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார் என்பது புரிகிறது.
அந்த வகையில் அவருக்கு வெற்றிதான்.
சாரா – கொஞ்சம் ஓவரா..!
– வேணுஜி