June 26, 2024
  • June 26, 2024
Breaking News
May 24, 2024

சாமானியன் திரைப்பட விமர்சனம்

By 0 124 Views

கிராமத்து மக்களின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்தவர் ராமராஜன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றவுடன் இதுவும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது. 

ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு நகரத்துக் கதையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அவர். அதுவும் மக்கள் நாயகன் என்கிற அவரது பட்டத்துக்குத் தகுந்தாற் போல் மக்களுடைய பிரச்சனை ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார் இந்தப் படத்தில்.

கிராமத்திலிருந்து தன் நண்பர் எம்.எஸ். பாஸ்கருடன் சென்னையில் உள்ள இஸ்லாமிய நண்பர் ராதாரவி வீட்டுக்கு வரும்  அவர்,  வெடிகுண்டுடன் சென்று ஒரு தனியார் வங்கியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்.

அதே வேளையில் எம்.எஸ்.பாஸ்கர், அந்த வங்கியின் மேனேஜர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்று அவர் குடும்பத்தையும்,  உதவி மேனேஜர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் செல்லும் ராதாரவி அந்த குடும்பத்தினரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள்.

மூவரின் நோக்கம் என்னவாக இருக்கிறது… வங்கியில் சிக்கியவர்களை மற்றும் வாங்கி மேனேஜர், உதவி மேனேஜர் குடும்பத்தினரை போலீஸ் மீட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தின் கதை சமீபத்தில் வந்த ஒரு படத்தின் கதையை நினைவு படுத்தினாலும் ராமராஜன் நடித்திருப்பதால் சற்று வித்தியாசப்படுகிறது.

முன்பாதிப் படம் இந்த கையகப்படுத்துதல் வேலையுடன் முடிய பின் பாதிப் படத்தில்தான் ராமராஜன் யார் அவருடைய நோக்கம் என்ன என்பதை எல்லாம் சொல்கிறார் இயக்குனர் ராகேஷ். 

படத்தின் தலைப்பில் இருந்து இது சாமானியர்களின் பிரச்சினை என்பது புரிந்து விடும். சாதனையாளர்களின் வீரத்தை விட, சாமானியனின் கோபம் பெரிது என்பதுதான் படத்தின் லைன்.

முக்கியமாக சாமானியர்களின் ஆசை வீடு வாங்குவது. அதற்காக அவர்கள் வங்கியில் கடன் பெறுகிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் மிரட்டல்களும் எந்த அளவுக்கு அவர்களை பாதிக்கிறது என்பதை சொல்லும் படமாக ஆனதால் இந்தப் படம் பார்க்கும் சாமானியர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொண்டு பார்க்க முடியும். 

ராமராஜன் வசூல் சக்கரவர்த்தியாக இருந்த நாளில் கூட பிரமாதமான நடிகர் என்ற பெயரெல்லாம் எடுத்தவர் இல்லை. சாமானிய மக்களின் ஒரு பிரதிநிதியாகதான் அவரை மக்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

அதனால், நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்துள்ள அவருக்கு உடல் நலக் கோளாறும் இருப்பதால் இயல்பான நடிப்பைக் காட்ட முயற்சித்திருக்கிறார். இருப்பினும் நடிப்பின் மீது ஆர்வம் குறையாமல் நடித்திருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். 

நடிப்பு என்று வரும்போது மகள் மீதான பாசம் கொண்ட அப்பாவாக நெகிழ வைத்திருக்கிறார். படத்தின் நீதியாக அவர் பேசும் வசனங்கள் கடன் கொடுப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கடன் வாங்குபவர்களுக்கும் ஒரு அபாய சங்கு. 

ராமராஜனின் நண்பர்களாக வரும் ராதாரவி, எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நட்பு பற்றித்தான் சொல்லியாக வேண்டும்.

இவர்களுடன் ராமராஜன் மகளாக நக்ஷா சரண், எம்எஸ் பாஸ்கர் மகனாக லியோ சிவக்குமார், வங்கி மேனேஜராக போஸ் வெங்கட். போலீஸ் அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்து தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

செம்புலப் பெயல் நீர் போல இதுவரை மக்களின் மனதில் கலந்து இருக்கும் ராமராஜன் படத்தின் இளையராஜா பாடல்கள்  போல, இந்தப்படத்துக்கு இசை ஞானி இசைத்திருக்கும் பாடல்கள் அத்தனை சுகமானதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கங்கே ஒலிக்கும் பழைய அவரது பாடல்கள் மிகப்பெரிய ஆறுதல்.

தன் ரீ எண்ட்ரியில் இதைப் போன்று அலட்டிக் கொள்ளாத வேடங்களை ஏற்று நடிப்புதான் மூலம் தொடர்ந்து ராமராஜன் திரையுலகில் பயணிக்க முடியும்.

சாமானியர்களின் பிரச்சனையை சொல்லி இருப்பதால் இந்த சாமானியனைப் பாராட்டலாம்..!