July 27, 2024
  • July 27, 2024
Breaking News
May 24, 2024

PT சார் திரைப்பட விமர்சனம்

By 0 116 Views

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..?

விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..?

அப்படியெல்லாம் உங்களை நினைக்கச் சொல்லவில்லையே என்று நம்மைக் கேட்பதாக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் வேறொரு கதையை இதில் சொல்லி இருக்கிறார்

கள்ளக்குறிச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவியின் சர்ச்சைக்குரிய மரணத்தை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அதை அடிப்படையாக  வைத்து அந்த மாணவிக்கு நீதி கிடைக்க ஒரு பி.டி. வாத்தியார் எப்படி முயற்சி எடுக்கிறார் என்று சொல்கிறார்.

எனவே, ஒரு நியாயத்தைத் தட்டிக் கேட்பவர் ஒரு பிடி மாஸ்டராகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவர் தமிழ் வாத்தியாராகவோ, ஆங்கில வாத்தியாராகவோ கூட இருக்கலாம். ஆனால், ஒரு விபத்தாக இதில் பி.டி.மாஸ்டர் அந்தத் தவறைத் தட்டிக் கேட்கிறார்.

அப்படி தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக ஆதி இருக்கிறார். அவருடைய எதிர்வீட்டு மாணவி இளவரசுவின் மகள் அனிகா சுரேந்திரன் ஒரு நாள் திடீரென தற்கொலை செய்து கொள்ள, அதைக் கொலைதான் என்று ஆதி வழக்குத் தொடுக்கிறார். 

அதுவும் யார் மீது..? அவர் வேலை பார்க்கும் பள்ளியின் சேர்மன் தியாகராஜன் மேலேயே புகார் சொல்கிறார்.

பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள்தானே…? வழக்கைத் திசை மாற்றி தப்பிக்க தியாகராஜன் முயல, அத்தனை சக்தி படைத்தவர் மீது உரிய ஆதாரங்களுடன் வழக்கை ஆதியால் நடத்தி வெற்றி பெற முடிந்ததா என்பது மீதிக் கதை.

ஆதியின் கேரக்டரை சரியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். ஜாதக ரீதியாக அவர் எந்த வம்பு தும்புக்கும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக  அவரது அம்மா தேவதர்ஷினி அவரை வளர்க்க, ஆதியும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் அந்த வம்பும் தும்பும் எதிர் வீட்டில் இருந்து துவங்குகிறது.

கேரக்டரை இப்படி வடிவமைத்தாலும் அதற்குப் பொருத்தமான ஹீரோ கிடைக்காமல் ஆதியிடம் தள்ளாடி வந்து சேர்ந்திருக்கிறது இந்தக் கதை. இதுவரை நாம் படித்த… பார்த்த… அத்தனை பிடி மாஸ்டர்களும் துடிதுடிப்பான உடல் வாகுடன் ஃபிட் ஆக இருந்திருக்கிறார்கள். 

இதில் புல் தடுக்கி விட்டாலும் கீழே விழுந்து விடும் நோஞ்சான் அளவுக்கு உடல்வாகுள்ள ஆதி எப்படி பி.டி.மாஸ்டர் ஆனார் என்று சந்தேகமாக இருக்கிறது. ஆனால், அதைப் புரிந்து கொண்ட இயக்குனர் நல்ல வேளையாக கடைசியில் சண்டை எல்லாம் போட்டு அவர் ஜெயித்ததாகக் காட்டாமல் கோர்ட் டிராமாவாக அதை முடித்து விடுகிறார்.

அதோடு வழக்கமாகக் காமெடி செய்கிறேன் என்று கூத்தடிக்கும் ஆதிக்கு அந்த வேலையும் இதில் இல்லாமல் (நல்ல வேளையாக) கதை சீரியஸ் ட்ராக்கில் போகிறது.

நாயகி காஷ்மிரா பர்தேஷி ஆதி படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பது பொருத்தமாக இருக்கிறது. வழக்கமான கமர்சியல் படங்களின் நாயகி போல எந்த இடத்துக்கு அவர் தேவையோ அதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது.

கதையின் மையப் புள்ளியாக அனிகா சுரேந்திரன் வருவதும் பொருத்தம். சமூக வலைத்தள நடைமுறைகளை கண்டிக்கும் படமாக இது இருந்தாலும் அதே சமூக வலைதளங்களில் வெளிவரும் அனிகாவின் நிஜ கிளாமர் படங்களும் நம் நினைவுக்கு வந்து உறுத்துகிறது.

ஆதியின் எதிர்கால மாமனாராகவும் அவரது வழக்குக்கு உறுதுணையாகவும் இருக்கும் பிரபுவுக்கு நல்ல பாத்திரம்.

அடக்கமான… அமைதியான… ஆழமான… ஆனால், ஆபத்தான வேடத்துக்கு தியாகராஜன் பொருத்தமாக இருக்கிறார்.

நீதிபதியாக பாக்யராஜ் வருவதும் அந்த நீதிமன்றக் காட்சிகளும் சினிமா கிளிஷேவுடன் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. இப்போது வரும் படங்களில் கோர்ட் விஷயங்கள் இயல்பாக சித்தரிக்கப்படுவதை இந்த இயக்குனர் பார்த்ததில்லையா..?

ஆதி ஆகச் சிறந்த நடிகர் இல்லை என்றாலும் அவரது இசையில் அமைந்த பாடல்கள் பிரபலமாகும் – இதில் அதுவும் மிஸ்ஸிங்.

கல்வி நிறுவனங்களை நடந்துபவர்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் என்பதை ஒரு கல்வி நிறுவனமே தயாரித்திருப்பது ஆச்சரியம்தான்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு  எப்போதுதான் ஒரு வெற்றிப் படம் அமையுமோ தெரியவில்லை.

பி.டி.சார் – சாரி சார்..!