December 2, 2024
  • December 2, 2024
Breaking News
May 24, 2024

பகலறியான் திரைப்பட விமர்சனம்

By 0 241 Views

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம்.

முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். 

வெற்றியின் பாத்திரமே முழுக்க முழுக்க நெகட்டிவ் பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்ஷயா கந்தமுதனைக் காதலிக்கும் அவர் கொலைக் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்தவர். வந்த இடத்திலும் போதை மருந்து கைமாறும் ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

வெற்றியின் பின்னணி தெரிந்த அக்ஷயாவின் தந்தை தன் மகளை அவருக்கு மணமுடிக்க மறுக்க அக்ஷயாவோ பிடிவாதமாக அவரைத்தான் மணப்பெண் என்று வெற்றியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஆனால் வெற்றியின் திட்டமோ வேறு. அக்ஷயாவை ஒரு விபச்சார கும்பலிடம் விற்கும் முடிவில் அவர் இருக்க… நமக்கு பதை பதைப்பாக இருக்கிறது. 

இரண்டாவது கதையில் பேச்சுத் திறனாளி முருகன் வீட்டை விட்டு வெளியேறிய தங்கையை தேடிக் கொண்டிருக்க அதை வைத்து அவரைப் பழி தீர்க்க ஒரு ரவுடி கும்பல் துரத்திக் கொண்டிருக்கிறது.

வெற்றியிடம் இரந்து அக்ஷரா தப்பித்தாரா, தன் தங்கையை முருகன் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிப் படத்தின் கதை.

இந்த இரண்டு கதைகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்க, பாதிப் படம் ஓடி விடுகிறது. ஆனால் ஒரு மெல்லிய இழை அளவே இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது.

தந்தையைக் கொலை செய்தவர்… போதை மருந்துக் கூட்டத்தில் இருப்பவர்… காதலித்த பெண்ணையே காசுக்காக கைமாற்றிவிடத் துடிப்பவர் என்று முழுக்க முழுக்க இப்படி ஒரு எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மிகவும் தைரியம் வேண்டும்.

வெற்றியிடம் அந்த தைரியம் இருக்கிறது ஆனால், அந்த தைரியத்தின் அளவுக்கு அவர் நடிக்கிறாரா என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி இறுகிய முகத்துடன் அவர் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

அவர் நடிப்பில் கொஞ்சம் முன்னேற வேண்டும் – அல்லது இதுபோன்ற இறுக்கமான பாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

படம் முழுவதும் வசனம் பேசாமல் இருப்பதால் அந்த பாத்திரத்துக்கு சைலன்ட் என்று பெயர் வைத்து நடித்திருக்கிறார் இரண்டாவது நாயகனான இயக்குனர் முருகன். 

அவருக்கும் இறுக்கமான வேடம்தான். இருந்தாலும் இறுதிக் காட்சியில் தங்கை செண்டிமெண்ட்டை வைத்து நம்மை ஈர்த்து கண்கலங்க வைத்து விடுகிறார். 

நாயகி அக்‌ஷயா கந்தமுதன் அழகு. தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் வினுப் பிரியாவின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. 

இந்தப் படத்தில் ஒரு வித்தியாசத்தைச் செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். இதுவரை நாம் படங்களில் கொடூரமான வில்லனாக அறிந்து வைத்திருக்கும் சாய் தீனாவை இதில் காமெடிப் போலீசாக நடிக்க வைத்துவிட்டு இதுவரை நாம் அறிந்த காமெடியன் சாப்ளின் பாலுவை ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் அதிரடியாக மாற்றிக் காண்பித்திருக்கிறார்.

சாய் தீனாவின் பாத்திரம் வரும் காட்சிகள் சற்றே நீளமாக இருந்தாலும் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ண உதவியிருக்கின்றன.

படம் முழுவதும் இரவில் மட்டுமே நடக்கிறது. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் அபிலாஷ்தான் பகலறியான் எனலாம். ஆனால் அருமையான லைட்டிங் செய்து நமக்கு அலுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்

விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தன்மைக்கு ஏற்ப பயணப்பட்டு இருக்கிறது.

படத்தை இயக்குவதே மிகப்பெரிய பொறுப்பு என்று இருக்க இரண்டாவது நாயகனாகவும் நடித்திருப்பதுடன் பட்ஜெட்டுக்கு பங்கம் இல்லாமல் ஒரு திரில்லர் கதையை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் வைத்து இயக்கியிருக்கும் முருகனின் முயற்சியைப் பாராட்டலாம். 

வசனங்களும் அங்கங்கே பாராட்ட வைக்கின்றன.

குழப்பம் இல்லாமல் கதையைப் புரிய வைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். 

பகலறியான் – இரு துருவம்..!