1947-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எதை கையில் எடுத்தாரோ நூறு வருடம் கழிந்தாலும், இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற அதைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்கிற கதை.
அப்படி 2047 – ல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் எல்லாம் அப்போது முடிந்து விட்டதாம். எல்லா நாடுகளும் மால்கம் என்கிற ஆதிக்க ஆயுத சக்தியின் கீழ் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
போப் வாழும் குட்டி நாடான வாடிகன் கூட மால்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லா உலக நாடுகளுக்கும் மால்கம் வரி விதிக்கிறது அதன்படி இந்தியாவும் வரி கட்ட வேண்டும் என்று அநியாய வரி போடுகிறார்கள்.
அதைக் கட்ட தவறினால் இந்தியா மீது மால்கம் போரிட்டு இந்தியாவை தன் வசப்படுத்தும் என்று அறிவிப்பு வர, நூறு ஆண்டுகளுக்கு முன் நேதாஜி கையில் எடுத்த ரெட் பிளவர் என்கிற யுத்த யுத்தியை இப்போது பயன்படுத்தத் தயாராகிறது இந்தியா.
சினிமா வழக்கப்படியே அதை ஒன் மேன் ஆர்மியாக ரகசிய ஏஜென்ட் விக்னேஷ் ஏற்று நடத்த அதன் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படம்.
விக்கி அவர் தம்பி மைக்கேல் என்கிற இரண்டு வேடங்களில் விக்னேஷ் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் இந்திய ராணுவத்துக்காக உழைக்க நினைத்து தேர்வுக்கு போனதில் அண்ணன் விக்கிக்கு மட்டும் அடிக்கிறது அதிர்ஷ்டம். எனவே வெகுண்டு எழுந்த தம்பி மைக்கேல், மால்கம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சதிகாரர் குழுவில் இணைந்து செயல்படுகிறார்.
அதன்படி தம்பிக்கு அண்ணன் விக்கியை கொல்லும் அசைன்மென்ட் தரப்படுகிறது. அதை அவர் சப் கான்ட்ராக்ட்க்கு விட்டதில் விக்கி தப்பித்திருப்பது தெரிகிறது. அத்துடன் அண்ணன் காதலி மனிஷா ஜஸ்னானி மேல் இவருக்கும் வாலி அஜித் டைப்பில் ஒரு கண்ணு இருக்க அதற்காகவும் அண்ணனை போட்டு தள்ளத் துடிக்கிறார்.
இரண்டு கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அண்ணன் தலை முடியை விட தம்பிக்கு 2 இன்ச் கூடுதலாக இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதற்குள் பாதிப் படம் ஓடி விடுகிறது. படம் முழுதும் பெரும்பாலும் டார்க் ஷேடில் நடப்பதால் இந்த வித்தியாசத்தை கூட நம்மால் உடனே உணர முடியவில்லை.
ஒரு மாதிரி அவர்கள் பேசுவதை வைத்துதான் அண்ணன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதும் தம்பியிடம் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதும் நமக்கு புரிகிறது.
ஆனால் அஜித்துக்கு ஒரு பில்லா போல விக்னேஷுக்கு இந்த படம் என்று சொல்லலாம். அப்படி ஒரு ஸ்டைலிஷ் ஆன வேடம் அவருக்கு.
அத்துடன் படத்தின் தரத்திலும் மிரட்டி இருக்கிறார்கள்.
நாயகி மனிஷா ஜெஷ்னானி, அநியாயத்துக்கு ஆடை குறைப்பு செய்து நம்மை சூடேற்றி மனிஷா உஷ்ணமானி ஆகியிருக்கிறார். இப்படி ஒரு கிளாமர் நாயகியை சமீபத்தில் நாம் பார்த்ததில்லை.
கதைப்படி அவர் அண்ணனின் காதலி என்றாலும் அவர்களுக்கான காதல் காட்சி குறைவுதான். ஆனால் மனிஷாவுடன் காதல் வயப்பட்ட தம்பி விக்னேஷ் அவரை அனுபவிப்பதாக கனவு காணும் காட்சிகள் எல்லாம் படம் முழுதும் வந்து கவர்ச்சியில் கிரங்கடிக்கின்றன.
இரண்டாவது மூன்றாவது கதாநாயகிகளாக வரும் அல்மஸ் அதம், ஷாம் இருவரும் கூட அப்படித்தான். அவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் வரும் அனைத்து பெண்களும் கிட்டத்தட்ட கிளாமராக தான் வருகிறார்கள்.
அதைவிட இந்தியாவின் குடியரசு தலைவராகவே கிருத்திகா என்ற ஓர் இளம் பெண்தான் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீண்ட காலம் சினிமாவில் நடித்ததற்காக இந்த படத்தில் இந்திய பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரனை ஆகியிருக்கிறார்கள் போல. அவரும் தன் அனுபவத்தை எல்லாம் கொட்டி இந்தியாவைக் காப்பாற்ற ராணுவ தளபதி நாசரை நம்ப, நாசரோ விக்னேஷை நம்புகிறார்.
இந்தியாவை அடிபணிய வைக்க மால்கம் குரூப், தலைவாசல் விஜய் தலைமையில் உலகில் எங்கெல்லாம் இந்தியப் பெண்கள் வசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் பாலியல் துன்புறுத்துவதற்கு உள்ளாக்கி கொல்கிறார்கள்.
இரண்டு மணி நேரத்தில் படத்தில் அப்படி ஒரு 150, 200 கொலைகள் நடந்திருக்கலாம்.
ஒரு கொலைக்காட்சி அடுத்து ஒரு கிளாமர் காட்சி இப்படியே படம் நெடுக நகர்ந்து கொண்டிருக்கிறது.
லூசிபர் என்ற பாத்திரத்தில் வரும் தலைவாசல் விஜய் இத்தனை வருடங்களில் இப்படி ஒரு கொலைகாரராக நடித்ததே இல்லை.
ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம்.கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கல் ரவி, யோக் ஜேபி, லீலா சாம்சன், மோகன்ராம் என்று எல்லோரிடமும் கால்ஷீட் வாங்கி அவர்களுக்கு தலா ஒரு காட்சி கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் ராம், படத்தொகுப்பாளர் அரவிந்தன் ஆகியோரை கூப்பிட்டு, இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. எனக்கு ஹாலிவுட் படம் போல ஒரு மேக்கிங் வேண்டும்..!” என்று சொல்லிவிட்டார் போலிருக்கிறது.
ஆனால் சும்மா சொல்லக்கூடாது… அவரவர் பங்கில் படத்தின் தரம் தூக்கலாக இருக்கிறது.
லாஜிக் விஷயங்களில் மட்டும் இது ஒரு தமிழ் படம் என்கிற உணர்வைத் தருகிறது.
உலகையே அச்சுறுத்தும் அளவுக்கு படை பலமும் பக்க பலமும் கொண்ட லூசிபரை விக்னேஷ் சர்வ சாதாரணமாக அவர் அறைக்கு உள்ளே போய் கொல்வதெல்லாம் மிகப்பெரிய நகைச்சுவை.
ஆனாலும் விக்னேஷ் நடித்த படம் இப்படி ஒரு தரத்தில் வந்திருப்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
அந்த வகையில் நோக்கத்தில் மட்டுமல்லாமல் ஆக்கத்திலும் உயர்ந்து நிற்கிறது படம்.
ரெட் பிளவர் – ஜெய்ஹிந்த்..!
– வேணுஜி