மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது.
அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பானபோது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருந்தது. அத்தனைபேரும் ராமாயணம் பார்க்க வீடுகளில் முடங்கினார்கள்.
ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போதும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. நாள் முழுக்க மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.
இதுபற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
“மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகும்.
டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மார்ச் 28, சனிக்கிழமை முதல். காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு எபிசோடும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை இன்னொரு எபிசோடும் தினமும் ஒளிபரப்பாகும்..!”