‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி.
பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார்.
“டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை அற்விக்கும் எண்ணமில்லை…” என்றார்.
தொடர்ந்து ‘மீ டூ’ பிரச்சினை பற்றியும், சபரிமலைக்குப் பெண்கள் செல்ல உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு பற்றியும் கேட்டதற்கு பதிலளித்த அவர், “மீ டூ’ என்பது பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அளவில் இருக்க வேண்டும். அதைப் பெண்களும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது..!” எனவும், “சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். அதே சமயத்தில் கோவிலின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்..!” என்றும் கூறினார்.
தாங்கும் பூமிக்கும், நடக்கும் காலுக்கும் வலிக்காத பதில்கள்..!