மனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு.
கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் அவர் நடிக்க கூடாது என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் விஜய் சேதுபதி செய்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலிக்காத நிலையில் முதல் குரலை ராதிகா உயர்த்தி இருக்கிறார்.
தன் டுவிட்டர் பதிவில் அவர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி இருப்பதுடன், விஜய்சேதுபதியை முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்பவர்கள் அதே முத்தையா முரளிதரனை தனது ஐபிஎல் அணியான ‘ சன் ரைசர்ஸ் ‘ கோச்சாக வைத்திருக்கும் சன் டிவியை ஏன் எந்த விமர்சனமும் செய்யவில்லை..? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
அத்துடன் அரசியல் பின்புலம் உள்ள காரணத்தால் அவர்கள் விளையாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றையும் எளிதாக கையாள முடிகிறது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இப்படி அவர் பதிவிட்ட உடனேயே அவருக்கு சில எதிர்ப்புகள் வந்திருக்கக்கூடும். உடனே தன் அடுத்த பதிவில் நான் சன் டிவியை எந்த விதத்திலும் குறை கூறவில்லை. என் மனதில் தோன்றிய பொதுவான நியாயத்தைதான் பேசினேன் என்று ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.
பிரச்சனை திசை திரும்பாமல் இருந்தால் சரிதான்..!