இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால் முன்னிலை இயக்குநராக அறியப்படுகிறார். போகிற இடத்திலெல்லாம் “நிறைய படியுங்கள். படங்களைப் பார்த்து படமெடுக்காதீர்கள்…” என்று அட்வைஸை அவிழ்த்து விட்டு விட்டு அவர் மட்டும் கொரிய, ஜப்பானிய படங்களை சுட்டே படமெடுப்பவர்.
இதுவரை அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் எந்தப்படத்தின் எடுத்தாளல் என்று பட்டியலே உள்ளது. இப்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக ‘சைக்கோ’ படத்தை எடுத்து வெளியிடும் முயற்சியில் அவராலேயே ஏற்பட்டிருக்கும் தடைகளை சமீப காலமாக அறிவீர்கள்.
சரி… ரெண்டு கம்பெனி ரெண்டு அட்வான்ஸ் வாங்கிய ‘சைக்கோ’ படத்தின் கதையாவது ஒரிஜினலா என்றால் அதுவும் இல்லை என்பதைத் தன் வாயினாலேயே ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் அவர்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு புத்தர் பற்றிய கதை ஒன்றை எங்கோ படித்துவிட்டு அதைப் படமெடுத்தே ஆக வேண்டும் என்று கமல், விக்ரம் எல்லோரிடமும் அந்தக் கதையைச் சொல்லிப் பார்த்தார். அவரது ‘ஆட்டிடியூட்’ காரணமாகவே அவரை பெரிய ஹீரோக்களெல்லாம் விட்டு விலகி ஓடினார்கள்.
இப்போது சைக்கோவும் அதே புத்தர் கதையிலிருந்துதான் உருவியிருக்கிறார். அதில் வரும் பாத்திரமான ‘அங்குலிமாலா’ என்ற தொடர் கொலைகளைப் புரிந்த கொலைகாரனை வைத்துதான் சைக்கோ கேரக்டரை புனைந்திருக்கிறார். ஒரிஜினல் கதையில் அந்த அங்குலிமாலா, தான் கொலை செய்தவர்களின் சுண்டுவிரல்களை எல்லாம் எடுத்து தன் குருவுக்குக் காணிக்கை செய்வான்.
அப்படி புத்தரைக் கொலை செய்ய முனைகையில் அது முடியாமல் புத்தரால் அவன் மனம் மாறி புத்த துறவியானான். இங்கே சைக்கோ கதையில் புத்தரை ஒத்த கேரக்டர் உதயநிதியுடையது. சீரியல் சைக்கோ கில்லராக புதுமுகம் நடிக்கிறார்.
இதெல்லாம் நாம் துப்பறிந்து சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் கொடுத்தது..!