February 13, 2026
  • February 13, 2026
Breaking News
February 13, 2026

பூக்கி திரைப்பட விமர்சனம்

By 0 18 Views

பூக்கி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஜென்z கிட்ஸ்களை அணுகவும்.

அதன் பொருள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை படம் முடிவதற்குள் ஒரு மாதிரி புரிந்து கொள்வீர்கள்.

படத்தின் ஆரம்பமே நாயகன் அஜய் திஷனுக்கும் ஆர்.கே.தனுஷாவுக்குமான பிரேக்கப்பில் தொடங்குகிறது. அதற்குப்பின் என்ன ஆனது என்கிற ஒரு வரிதான் கதையே.

ஆனால், இந்த ஒரு வரிக் கதைக்குள் இன்றைய இளைஞர்களின் எண்ணம், செயல், போக்கு எல்லாவற்றையும் படம் பிடித்து காட்ட முயற்சித்து இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கணேஷ் சந்திரா.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், நடிப்பு உடல்மொழி எல்லாவற்றிலும் பாத்திரத்தை மிகச் சரியாக உள்வாங்கி அதை வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் அறிமுகமான ஹீரோக்களில் நம்பிக்கை.வைக்கும் முகமாகி இருக்கிறார் திஷன்.

நாயகி தனுஷாவுக்கு நடிகைக்கான முகவெட்டு இல்லாததே அவரை பாத்திரத்துடன் பொருத்தி இயல்பான பெண்ணாகப் பார்க்க முடிகிறது.

அஜய் திஷனின் தந்தையாக வரும் பாண்டியராஜன், தன் கனவை மகன் நிறைவேற்றி விட்டதில் நெகிழ்ச்சி அடையும் காட்சியில் உருக வைக்கிறார். 

கமர்சியல் சாமியாராக வரும் சுனில் தன் நடிப்பால் அடையாளம் தெரிகிறார்.

சைக்காலஜிஸ்ட் லக்‌ஷ்மி மஞ்சுவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.

இவர்களுடன் இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடிததிருக்கிறார்கள்.

தயாரிப்பு, இசையுடன் படத்தொகுப்பு பணியையும் கவனிக்கும் உலகின் ஒரே தொழில்நுட்ப வல்லுநர் விஜய் ஆண்டனியாகத்தான் இருப்பார்.

ஆனால் அதற்காக நின்றால்… எழுந்தால்… படுத்தால்… புரண்டால்… ஒரு பாடல் என்று படத்தில் காட்சிக்கு காட்சி பாடல்களாக வந்து கொண்டிருப்பது சற்று அலுப்பைத் தருகிறது.

புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் உளவியல் பூர்வமாக இருந்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. இதே விஷயத்தை இன்னும் சுவை பட சொல்லி இருக்க முடியும்.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் எந்த திருப்பமும் எதிர்பாராத நிகழ்வுகளும் இல்லாமல் தட்டையாக நகரும் திரைக்கதையும், எல்லோரும் யூகித்து விடும் கிளைமாக்ஸ்சும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகிறது. 

இருப்பினும், படத்தின் தர நேர்த்தி அற்புதமாக அமைந்திருக்கிறது. 

காதல் கதைகள் எங்கெங்கோ போய்விட்ட இந்த காலத்தில் Gen Z க்கான களத்தை எடுத்துக்கொண்டு அதில் பூமர் சிந்தனையை புகுத்தி இருப்பதில் எந்தப் புதுமையும் இல்லை.

பூக்கி – உலகறிந்த காதல் கதை..!

– வேணுஜி