ஹாரர் என்கிற அமானுஷ்யப் படங்கள் எடுத்தால் ஓடாது என்று ஒரு நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. பிறகு அதுவே நேர்மறை ஆகிப் பேய் படங்கள் நன்றாக ஓடத் தொடங்கின. அதிலும் ஹாரர் காமெடிப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
அதனால் ஹாரர் படங்களை சீரியஸாக சொல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்த நேரத்தில் முழு ஹாரர் ஃபேண்டஸி என்கிற அளவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்.
மலைக்காட்டுப்பகுதிக்கு காதலியை தள்ளிக் கொண்டு போகும் ஒருவர் அமானுஷ்ய சக்தியால் இறக்கிறார். தேடிக் கொண்டு போன காதலியும் அதே சக்தியால் உயிரிழக்கிறார்.
இது நடந்து சில காலம் கழித்து அந்த இடத்துக்கு காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேர் ட்ரெக்கிங் செல்ல முடிவெடுக்கின்றனர்.
இவர்களை வழிநடத்துவதற்காக அந்த காட்டுப்பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட பாலசரவணன் நியமிக்கப்படுகிறார். காட்டுப்பகுதிக்குள் சில இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பால சரவணன் அறிவுறுத்தியும் இளமை வேகம் காரணமாக இந்த ஐந்து பேரும் அங்கங்கே விதிகளை மீறுவதில் நாம் முதல் காட்சியில் பார்த்த அந்த அமானுஷ்ய சக்தியிடம் ஒவ்வொருவராக சிக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களால் அந்த பயங்கரங்களில் இருந்து மீள முடிந்ததா, அந்த அமானுஷ்யத்தின் மொத்த வரலாறு தெரிந்த பால சரவணன் மீண்டாரா அவர்களை மீட்டாரா என்பதுதான் மீதிக் கதை.
இது ஹாரர் வகைப் படம் என்பதால் முதல் காட்சியிலிருந்தே நம்மை பயமுறுத்த ஆரம்பித்து விடுகிறார் எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன்.பி
படம் தொடங்கியதிலிருந்து எந்த இடத்திலும் நம்மை நெளிய விடாமல் ஒருவித பரபரப்புடனேயே சென்று முடிவது சிறந்த இயக்கத்திற்கு சான்று.
இது போன்ற ஹாரர் வகைப் படங்களுக்கு ஒளிப்பதிவும், இசையும் மிக முக்கியமானவை.
அதைப் புரிந்து கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் ஒவ்வொரு காட்சிக் கோணத்தையும், கலரிங்கையும் ஓவியம் அமைத்திருக்கிறார். அழகான இடங்களே ஆபத்தானவை என்று சொன்னால் நம்பும் வகையில் அழகும் ஆபத்துமாகக் கடக்கும் படம் கண்களை திரையில் இருந்து எடுக்க முடியாமல் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனும் தன் பங்குக்கு ஒளிப்பதிவாளருடன் போட்டி போட்டு உழைத்திருக்கிறார். அதிலும் பேச்சி வரும் காட்சிகள் நம் பேச்சு, மூச்சை நிறுத்துவதாக அமைகிறது
இதுவரை காமெடியனாக வந்து நம்மை அவ்வப்போது சிரிக்க வைத்துக் கொண்டிருந்த பால சரவணன் இதில் முழுமையான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஆபத்து தெரியாமல் இளைஞர்கள் நடந்து கொள்ள, அந்த ஆபத்தை முழுதும் தெரிந்தவராக தனது முக குறிப்பின் மூலமே உணர வைக்கும் பால சரவணனுக்கு பாராட்டுகள்.
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் உள்ளிட்ட இளைஞர் பட்டாளமே படம் முழுவதும் நிறைந்திருப்பதுடன் அந்த இயற்கையுடன் பொருந்தி நம் கண்களைக் குளிர்விக்கிறார்கள்.
அந்த பேச்சி வேடமிட்டு இருக்கும் பாட்டியை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்துவிட முடியாது. தள்ளாத வயதில் தடியூன்றி நடந்து வந்தாலும் நம் அடிவயிற்றில் பீதிப்பந்தை நன்றாகவே உருள விட்டு இருக்கிறார் அந்தப் பாட்டி.
எல்லோரும் அமானுஷ்யத்திற்கு இரையானது போலவே லீடிங் நடிகையான காயத்ரியும் இரையாகும் போது ஒரு வித ஏமாற்றம் நிலவுகிறது. ஆனால் அதற்கெல்லாம் கிளைமாக்ஸில் பதில் சொல்லி சமன் செய்து நம்மைத் திருப்திப்படுத்தி அனுப்புகிறார் இயக்குனர்.
அத்துடன் அடுத்த பாகத்துக்கான லீடாகவும் அதுவே அமைகிறது.
பேச்சி – அலற வைக்கும் பேய்ச்சி..!