November 24, 2024
  • November 24, 2024
Breaking News
May 29, 2024

தமிழில் தலைப்புக்கா பஞ்சம்..? – வைரமுத்து கேள்வி

By 0 170 Views

வைரமுத்து பங்கேற்ற “பனை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!
ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.

ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, தயாரிப்பாளரும் கதாசிரியருமான எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது. கவிப்பேரரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தி பேசிய தயாரிப்பாளரும் கதாசிரியருமான
எம்.ராஜேந்திரன்…

“கவிப்பேரரசு ஐயா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களையும் வருக..வருக..என வரவேற்கிறேன். இந்த படத்தை எடுக்க காரணம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும், பனை தொழிலாளிகளின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்பது தான். என்னுடைய இணை தயாரிப்பாளர் பிரபாகரன் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். யார் யார் என்ன தொழில் செய்தாலும் சரி, பனை மரங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதன் நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இதற்காக தான் நம் கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களை பாடல் எழுத வைத்தோம், அவர் இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளரும் நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் பல விருதுகளை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

நாயகி மேக்னா பேசுகையில்,

“மேடையில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள், அவர்கள் முன்பு பேசும் போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு சோலோ பாடல் இருக்கிறது, அந்த பாடல் வைரமுத்து சார் வரிகளில் அமைந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, அவர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நாயகன் ஹரிஷ் பிரபாகரன் பேசுகையில்,

”எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத தயாரிப்பாளர் ராஜேந்திரன் அண்ணனுக்கு நன்றி. வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், வைரமுத்து ஐயா, தலைவர்
ஏ.எம் விக்ரமராஜா, இயக்குனர்கள் அரவிந்தராஜ் சார், கவிஞர் சொற்கோ பேரரசு சார் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் சந்திப்பது எனக்கு பெருமை என்றார்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசியதாவது

“கவிஞர் கவிப்பேரரசு பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்ல அவரை போல நிறைய விருதுகள் வாங்கும் என்ற நம்பிக்க இருக்கிறது. இந்த படத்தின் அழைப்பிதழை பார்த்த போது வைரமுத்து ஐயா எழுதிய தனிப்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அது மரத்தை அழிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் ஒரு பாடல், அந்த பாடலில் மனிதன் பிறந்ததில் இருந்து, இறப்பு வரை மரம் அவனது வாழ்வில் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த பாடலின் இறுதியில், ”மனிதன் வாழ்க்கையில் அனைத்தும் மரம் தான் மரம் தான், ஆனால் மனிதன் இதை ஏனோ மறந்தான் மறந்தான்” என்று சொல்லியிருப்பார், எனக்கு மரங்களை பார்க்கும் போது எல்லாம் அந்த பாடல் தான் நினைவு வரும். அதேபோல் அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ரசனை மிக்கதாய் இருக்கும், “மல்லிகையை நீ சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்” என்று எழுதியிருக்கிறார், இது யாரும் யோசிக்க முடியாத கற்பனை. இந்த இடத்தில் தான் அவர் என்னை கவர்ந்தார். நிறைய நேரம் அவரது வரிகளால் வியந்திருக்கிறேன். ”இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம்” என்றார். இதெல்லாம் நான் யோசிச்சி பார்க்க முடியாத கற்பனை. அப்படிப்பட்ட மனிதர் உடன் மேடையில் உட்கார்ந்திருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் விக்கிரமராஜா பேசுகையில்,

“பனை மரம் என்பது என்பது ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்போது பனை பொருட்களை பயன்படுத்துபவர்கள் ஏழைகள். அப்போது அரிசி சோறு சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள், கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடுபவர்கள் ஏழைகள். ஆனால், இன்று கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடகிறவர்கள் பணக்காரர்கள், அரிசி சோறு சாப்பிடுகிறவர்கள் ஏழைகள். அதுபோல் தான் பனைக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது.

பனை மரம் என்பது நாங்கள் ஆண்டு அனுபவித்தவர்கள். 30 வருடங்களாக பனை பொருட்களை உண்டு, குடித்து நான் வாழ்ந்திருக்கிறேன். பனை மரத்தின் ஓலையில் செருப்பாக பின்னி பயன்படுத்துவோம், பனை நாரை பின்னில் கட்டில் செய்து படுப்போம், நல்லா குளிர்ச்சியாக இருக்கும். எல்லா வகையிலும் பனை பயன்பெறும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பனக்கெழங்கு சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருந்த உணவு, சுகாதாரம் இன்று இல்லாமல் போய்விட்டது. இந்த படத்தின் பாடல் வரிகளில் கவிப்பேரரசு எழுதியிருக்கிறார், வியாபாரிகள் பனைவெள்ளத்தில் கலப்படம் செய்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். வியாபாரிகள் கலப்படம் செய்யவில்லை, அதற்கு சட்டமே இருக்கிறது. இன்று கலப்படம் இல்லாத எண்ணெய் சாப்பிடுபவர்கள் இருக்கிறீர்களா?

இன்று பாமாயில் எண்ணெய் விலை கூடினால் தேங்காய் எண்ணெய் விலை கூடும், கடலை எண்னெய் விலையும் கூடும். அப்படியானால் என்ன அர்த்தம், பாமாயில கலந்தால் தான் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய். சட்டம் சொல்லுது இனிப்போட இனிப்பை கலந்துக்கொள்ளலாம் என்று. அதனால் தான் நாங்க இன்று பனைவெள்ளம் சாப்பிட வேண்டும் என்றால், ஊரில் ரூ.360 கொடுத்து ஒரு கிலோ வாங்குகிறோம். ஆனால், இங்கு ரூ.160-க்கு ஒரு கிலோ பனைவெள்ளம் விற்கிறார்கள், அது பனை வெள்ளம் இல்லை, சர்க்கரையோடு கலந்த பனைவெள்ளம். சில ஊரில் தேன் கூடு வளர்ப்பவர்களின் வீடுகளில் சர்க்கரை மூட்டை இருக்கும். பதநீர் என்பது அவ்வளவு வலிமையை கொடுக்கும் உணவு.

நாங்கள் அன்று பசிக்காக பதநீர் குடித்தேன், அதன் பிறகு தான் தெரிந்தது, 120 கிலோ உப்பு மூட்டையை தூக்குகிற அளவுக்கு என் எலும்பு மற்றும் தசைக்கு வலிமை கொடுத்தது பதநீர் என்பது தெரிந்தது. தமிழகத்தில் இருந்து வேலை வாய்ப்பு இல்லை, என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை, இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு வட இந்திய இளைஞர்களுக்கு தான் வேலை கொடுப்பதாக சொல்கிறார்கள், என்னிடமே பலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வேலை செய்வதற்கு நம் ஆட்களின் உடம்பில் வலு இல்லை. அதனால் தான் வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நம் உணவு முறை மாற்றம். இன்று அரசு பனை மரத்தை தேசிய மரமாக அறிவித்திருக்கிறது என்றால், அதனை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

பனை மரத்தை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அண்ணனுக்கு பாராட்டுக்குள். வியாபாரி என்பவர் ஜெயிக்க வேண்டும், இந்த படத்தை தயாரித்த ராஜேந்திரன் அண்ணனும் ஜெயிக்க வேண்டும். பனைமரம் பாதுகாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கும் அவர் நிச்சயம் ஜெயிப்பார். பனை படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று சொல்லி வாழ்த்து விடைபெறுகிறேன்.” என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்,

“நண்பர்களே மிக மாறுபட்ட முஒரு படத்தின் பாடல்கள், ஒரு படத்தில் கதைக்கூறுகள், ஒரு படத்தில் அழகியல் இவற்றோடு முடிவது தான் ஒரு திரைப்பட பாட்டு வெளியீட்டு விழாவின் சம்பிரதாயங்கள், அல்லது கண்மூடித்தனமான மரபுகள். ஆனால், அதை தாண்டி இந்த விழா சமூகம் குறித்து பேசியிருக்கிறது. மண் குறித்து பேசியிருக்கிறது, மன்னின் தாவரமான பனை குறித்து பேசியிருக்கிறது. பனை என்பது இந்த படத்தின் பெயர் அல்ல, நம் மண்ணின் பெயர், மக்களின் பெயர், நம் கலாச்சாரத்தின் குறியீடு, என்று தான் நான் கருதுகிறேன்.

ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிக மிக அவசியம். கடந்து போவது எளிது ஆனால் கடந்து செல்லும் போதே ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது வருகிற தமிழ்ப் படங்களின் தலைப்புகளை பார்க்கும் போது நான் கொஞ்சம் துக்கப்படுகிறேன், சில நேரங்களில் வெட்கமும் படுகிறேன். அந்த பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அது வெறும் சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்காக பஞ்சம், தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம், தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களை, தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள் சூட கூடாது என்று பார்க்கிறேன். தலைப்பு என்றால் நெஞ்சை தைக்க வேண்டாமா?, என் இருதயத்துக்குள் சென்று பசைப்போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா?, என் நா திருப்பி உச்சரிக்க வேண்டாமா?, தலைப்பு என்பது ஒரு படத்துக்கு ஒரு கருத்தை சொல்வதாகவும், இன்னொன்று ஒரு காட்சியை விரிய செய்ய வைப்பதாகவும், அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், அமைய வேண்டும் என்ற வகையில் தான் நம் முன்னோர்கள் தலைப்பு வைத்தார்கள். பழைய தலைப்புகளை பார்த்தால், அந்த தலைப்புகளில் கதை வரும். ’மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்’ என்றால் ஒரு சமூகத்தின் பண்பாடே வந்துவிடும். ’கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று சொன்னவுடன் ஒரு கலாச்சாரத்தின் விழிமியம் வந்துவிடுகிறது. அதெல்லாம் பழசு என்பது நமக்கு தெரியும், ஆனால் அந்த வழியில் வருகிறவர்கள் தலைப்புகளில் ஒரு ஆழ்ந்த கவனத்தை செலுத்தி, நிகழ்காலத்தின் பொருள் குறித்தும், நிகழ்காலத்தின் மாற்றம் குறித்தும், நமது விழிமியப்போக்குகள் எது விழுகிறது, எது எழுகிறது என்பது குறித்தும் இந்த தலைப்புகள் எதாவது மக்களுக்கு சொல்லி செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதையாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்துக்கு சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கவிஞனின் வேண்டுகள் அல்லது ஒரு பாடலாசிரியனின் வேண்டுகள் என்று நினைத்து விடாதீர்கள், இது தமிழ் மக்களின் வேண்டுகோள், பாமரனின் வேண்டுகோள், உழவனின் வேண்டுகோள், மூட்டை தூக்குகிற தொழிலாளியின் வேண்டுகோள், விறகு வெட்டியின் வேண்டுகோள். அவன் தமிழோடு இருக்க விரும்புகிறான், ஆனால் நீங்கள் தள்ளி நிற்கிறீர்கள். நான் ஒன்று கேட்கிறேன், தமிழுக்கு மாறுபட்ட மொழியில் நீங்கள் தலைப்பு வைத்து அந்த படம் வெற்றி பெறுகிறது என்றால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்த படம் வெற்றியும் பெறுவதில்லை என்ற போது, ஏன் நீங்கள் அப்படி தலைப்பு வைக்கிறீர்கள்?

இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்ன இயக்குநர், படத்திற்கு ‘விதை’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன், என்று சொன்னார். நான் சொன்னேன், விதை நல்ல பெயர் தான். ஆனால், நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளியிருக்கிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த துடிப்பும் தலைப்புக்குள் வர வேண்டும் என்றால் தம்பி ‘பனை’ என்று பெயர் வையுங்கள், என்று சொன்னேன். அவர் உடனே ஏற்றுக்கொண்டு, விதையை விட பனை எனக்கு பக்கத்தில் இருக்குது ஐயா என்று சொன்னார், வாழ்க என்று சொன்னேன்.

நண்பர்களே, இந்த பனை என்ற குறியீட்டை பற்றி உங்களுக்கு சில செய்திகளை சொல்லியாக வேண்டும். இந்தியாவில் 11 கோடி பனைமரங்கள் இருக்கின்றன. இதில், 6 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன. இந்த பனைமரம் என்பது தமிழ்நாட்டு தாவரம். இந்த பனை மரத்தை சாதாரணமாக கருத வேண்டாம் வெறும் மரம் என்று, நமது முடியாட்சியோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. நமது கலாச்சாரத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்களுக்கு மூன்று கொடி இருப்பது தெரியும். சோழனுக்கு புலிக்கொடி, பாண்டியனுக்கு மீன் கொடி, சேரனுக்கு வில் கொடி என்பது உங்களுக்கு தெரியும். இந்த மூன்று மன்னர்களுக்கும் மூன்று மாலைகள் இருந்த கதை தெரியுமா?, பாண்டியனுக்கு வேம்ப பூ மாலை, சோழனுக்கு ஆத்திமலர் மாலை, சேரனுக்கு பனம்பூ மாலை, சேர மன்னன் தனது நெஞ்சில் அணிந்து தேசிய பூவாக கருதியது பனம்பூ மாலை, அது நம்முடிய வரலாறு. இந்த பனை மாதிரி தாய் கூட கொடுக்க முடியாது. தாய்ப்பால் கொடுத்ததற்காக தாய்க்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள், தாயும் நம்மிடம் எதிர்பார்ப்பாள், அது தவறில்லை, அவளுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், பனை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் தண்ணீரை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் பராமரிப்பை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் உரத்தை எதிர்பார்ப்பதில்லை. அது வானத்தில் இருந்து நீரை வாங்கிக்கொள்கிறது, வானத்தில் தண்ணீர் குறைந்த போது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. பனைமரத்தை தமிழ்நாட்டின் தேசிய மரமாக அறிவித்த செய்தி சொல்கிறது, பனை மரம் இந்த நாட்டில் எவ்வளவு உணரப்பட்டிருக்கிறது என்று. இந்த பனை என்பதை நாம் தலைப்பாக மட்டும் கருத வேண்டாம் தோழர்களே, பனை அந்த பனை சார்ந்த வாழ்க்கை, அந்த வாழ்க்கையோடு கூடிய மனிதர்கள், இவர்களுடைய கதையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த படத்தின் காட்சிகளை இன்று தான் உங்களோடு இணைந்து பார்த்தேன், அதில் வெற்றியின் கூறுகளை பார்த்தேன், எனக்கு மகிழ்ச்சி. முழு படத்தையும் பார்க்காமல் கருத்து சொல்வது உகந்ததல்ல என்று நினைக்கிறேன். அதனால், என்னுடைய விருப்பத்தை சொல்கிறேன், இந்த படம் வெற்றி பெற வேண்டும், அதற்காக கூறுகள் படத்தில் இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த படத்திற்கு பாடல்கள் எழுதினேன், கீரவாணியிடம் பணியாற்றிய மணிலால் இசையமைத்திருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் பனை மரம் போல் வந்து படம் எடுக்கிறேன், என்று சொன்னால், அவருக்கு என் வாழ்த்துகள். அவர் தொடர்ந்து படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய இயக்குநர்கள் அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசுக்கு நன்றி, அவர்கள் பேசிய எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு பொன்னாடை உள்ளிட்ட எதுவும் மகிழ்ச்சி தராது, கைதட்டல்கள் தான் மகிழ்ச்சியை கொடுக்கும், கலைஞனின் படைப்பை மக்கள் புரிந்துக்கொள்ளும் முறை தான் அவனுக்கான விருதுகளாக அமையும், அப்படி என் வரிகளை புரிந்து, ரசித்து அதை இங்கு நினைவு கூர்ந்ததற்காக அவர்களுக்கு நன்றி.

பாடல்களை புரிந்துக்கொள்வதற்கு கொஞ்சம் விசாலம் வேண்டும். தமிழர்கள் எல்லாம் தமிழை ரசிக்கிறார்கள், என்று தான் நான் நம்புகிறேன். நான் நம்புவதற்கு காரணமே தமிழ்நாட்டு மக்கள் பழமொழி படித்து வந்தவர்கள், விடுகதை போட்டு வந்தவர்கள், எழுத்தறிவு இல்லாதவன் கூட தமிழோடு உறவாடி வந்திருக்கிறான் தமிழ்நாட்டில். அவனை கேட்டால் விவாதிப்பான், பழமொழிகளில் பதில் சொல்வான், விடுகதைகளில் சிக்க வைப்பான், அப்படி தமிழன் வாழ்வோடு, தமிழோடு ஊரி வந்திருக்கிறான். எனவே, இந்த தமிழும் அவனுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். சில இடங்களில் சிலருக்கு புரிவதில்லை, அந்த இடத்தில் தமிழ் நிலைப்பதில்லை. ஒரு பாடலில் கண்ணதாசன் எழுதினார், “பூ மனம் கொண்டவல் பால் மனம் கண்டால்…” பத்து மாதங்களை நான்கு சொற்களில் கடந்துவிட்டார் கவிஞர் கண்ணதாசன், இந்த பொருள் எத்தனை பேருக்கு புரிந்திருக்கிறது. இதை புரிந்துக்கொள்ளும் போது கவிஞன் மீது காதல், மொழி மீது காதல், நம் மீதே காதல், நம் கலாச்சாரத்தின் மீது காதல் ஏற்படுகிறது. ”கண்ணத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா…” என்றார் பட்டுக்கோட்டை, ஒரு முத்தத்தை கடனாக கேட்கிறார், கடன் கொடுத்தால் திருப்பு கொடுக்க வேண்டும், நான் வட்டியுடன் கொடுப்பேன், இரண்டாக கொடுப்பேன். “கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு” என்ற பாட்டில் வாலி எழுதுகிறார், ”பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தால், மூனாக செய்யும் வளையல்” என்று, ஒரு வளையலின் ஓசையை எப்படி எல்லாம் பயணிக்க வைத்திருக்கிறார் பார்த்தீங்களா, இதை புரிந்துக்கொண்டால் உங்களுக்கே நீங்கள் கைதட்டி கொள்ளலாம். அந்த வகையில், இந்த படத்தில் ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன், “ஒத்த பனமரா நான் ஒத்தையிலே நிற்கிறேனே, புத்திகெட்ட அத்த மகன் புலம்பவிட்டு போனானே…” இது ஒரு பெண்ணின் ஏக்கம். இதில், ஒத்த பனமரமா என்று வார்த்தை முதல் வரியில் வைத்தததில் ஒரு விடுகதை இருக்கு, இதற்கு கடைசி வரியில் விடை சொல்லியிருக்கிறேன். ஒருதலையா காதலிச்சா வெற்றி பெற முடியாது, அதுபோல் ஒத்த பனமரத்தில் ஊஞ்சல் கட்ட முடியாது. அதனால், இரண்டு ஒத்த பனமரத்தில் தான் ஊஞ்சல் கட்ட முடியும், எனவே நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் காதல் ஜெயிக்கும், என்று சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட விசயங்களை எல்லாம் நீங்கள் புரிந்துக்கொள்ள பயிற்சிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பாடல்களில் நான் முயற்சி செய்திருக்கிறேன்.

இன்று ஒரு படம் தயாரிப்பது எளிது, பணம் இருந்தால், நல்ல கதை இருந்தால் படம் தயாரித்து விட முடியும். ஆனால், ஒரு படத்தை வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பணம் இருந்தால் கூட படத்தை வெளியிட்டு விட முடியாது. திரையரங்கங்கள், காலம், சூழல் என அனைத்தும் வேண்டும். இவை அனைத்தும் இருந்தாலும் கூட படத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் நல்ல மனநிலையோடு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழல்களை நீங்கள் உருவாக்கிகொண்டு இந்த படத்தை வெளியிட வேண்டும். பனை வெற்றி பெற்றால் சிறு தயாரிப்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இங்கு மீண்டும் மீண்டும் ஒரு செய்தி சொல்லப்பட்டது, சிறிய பட நிகழ்ச்சிக்கு வைரமுத்து வந்திருக்கிறார், பல விருதுகள் வாங்கிய அவர் வந்திருப்பது இந்த நிகழ்ச்சிக்கு பெருமை என்று. தயவு செய்து அதை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற படங்களால் தான் நான் விருது பெறுகிறேனே தவிர, இந்த விழாவுக்கு வந்ததால் நான் பெருமை கொள்கிறேனே தவிர, நான் பெரியவன் அதனால் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன், என்று நான் ஒருபோதும் கருத மாட்டேன். ஏன் என்றால், “எவனுக்குள் என்ன குனம், எவனுக்கு என்ன வரம் கண்டதில்லை ஒருவருமே, ஒரு விதைக்குள் அடைபட்ட ஆலமரன் கண்விழிக்கும் அதுவரை பொறுமனமே..” என்று எழுதியவன் நான். அதனால், என்னை தேடி புதிய இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ வரும் போது, எந்த விதைக்குள் எந்த விருட்சமோ என்று தான் நான் பார்க்கிறேன். அப்படி இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என்னை வந்து பார்த்த போது, இவர்களுக்குள் ஒரு பாரதிராஜா, ஒரு சங்கர், ஒரு மணிரத்னம் இருக்க மாட்டார்களா, என்று தான் கருதிப்பார்க்கிறேன். அதனால் நீங்கள் எல்லோரும் வளர வேண்டும். எந்த மரமும் புயலில் சாய்ந்துவிடும், எந்த மரமும் வெயிலில் காய்ந்துவிடும். ஆனால், எந்த புயலுக்கும் சாயாத மரம், எந்த வெயிலுக்கும் காயாத மரம் பனை. அந்த பனை போல் இந்த பனை படக்குழு வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் இறுதியில் இசை குறுந்தகடை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக்கொண்டார்.