கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம்.
கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது.
இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது.
அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு காட்டுக்குள் பயணிக்கிறது. அதை வழிநடத்திச் செல்லும் இளம்பெண் அந்த வேலையை விட, அவர்களுக்கு உதவி செய்ய வந்த ஆதிவாசி பெண்ணின் முறைமாமன் பற்றி அறியவே அதிக ஆர்வம் காட்டுகிறார்.
அது ஏன் என்பது படத்தின் சஸ்பென்ஸ். அவர் தேடும் ஆதிவாசிப் பெண்ணின் முறை மாமன் அதே மலைக் காட்டுக்கு தினசரி வந்து ஆதிவாசி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருந்திருக்கிறார். திடீரென்று மாயமான அவரைக் கண்டுபிடிக்கும் நோக்கம் படத்தின் இரண்டாம் பாதியில் பிரதானமாக ஆக்கப்படுகிறது.
பாடம் நடத்தி வந்த ஆசிரியர் என்ன ஆனார், காபித் தோட்ட விரிவாக்கம் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக் கதை.
முதல் பாதிக் கதையை மட்டும் பார்த்துவிட்டு எந்த முடிவுக்கு வந்துவிட முடியாது. இரண்டாம் பாதிக் கதையையும் பார்த்தால்தான் இந்தப் படத்தின் நோக்கம் என்ன என்பதும் அதில் இருக்கும் ரகசியமும் புரியும்.
அப்படி ஒரு வித்தியாசமான திரைக் கதையை அமைத்து நம்மைத் திரில்லுக்கு உள்ளக்குகிறார் இயக்குனர் சுபரக் முபாரக்.
படத்தைத் தாங்கிச் செல்லும் வின்ஷூ, விஜே பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீனா, கேத்தி, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால் ஆகியோர் அதிகம் அறியாத முகங்களாக இருந்தாலும் படத்தின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு காடுகளை கலர்ஃபுல்லாக்கி இருக்கிறது. அஸ்வத்தின் இசையும் ஆபத்துக்கு ஆபத்தும், இளமைக்கு இனிமையையும் கூட்டி இருக்கிறது.
திரில்லராகத் தொடங்கிய கதை பின் பாதையில் கல்வியின் முக்கியத்துவம் சொல்லி முடிந்தாலும், ஆபத்துக்களை தாண்டி கல்வி கற்பிக்க வரும் ஆசிரியருக்கு ஆதிவாசிகளின் அறியாமையால் ஏற்படும் துன்பம் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையில்லாத பயத்தை ஏற்படுத்தக் கூடும்.
அதேபோல் ஆதிவாசிகள் நம்பும் தெய்வம் அவர்களைக் காப்பதற்கு பதிலாக அழிக்கவே பயன்பட்டிருப்பதும் ஒரு குறை.
மற்றபடி வெளி உலகை அறிந்து கொள்ளவும் அறிவுக் கண்ணைத் திறக்கவும் கல்வியின் மகத்தான பங்கை எடுத்துச் சொல்லி இருக்கும் இயக்குனருக்கும் பட குழுவுக்கும் பாராட்டுகள்..!
நறுவீ – நன்று..!
– வேணுஜி