குழந்தைப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஒரு குழுவினரின் ஆசைகள், பாசம், காதல், நட்பு, பிரிவு, ஏமாற்றம், வெற்றி எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.
ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், யூ ட்யூபர் இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ்தான் அந்த நட்புக் குழு.
கல்லூரி முடித்ததும் எல்லோரும் தனித்தனியாக வேலைக்குப் போவதை விடுத்து இதேபோல் ஒரு குழுவாக இன்றைய நவீனத்துவத்திற்கு ஏற்றாற்போல் தொழில் தொடங்கலாம் என்று ஆனந்த் ஒரு ஆலோசனை சொல்ல, எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த ஆலோசனை வெற்றி அடைந்திருந்தால் படம் அரை மணி நேரத்தில் முடிந்து போயிருக்கும். ஆனால் அது வெற்றி அடையாமல் போவதில் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை போய் நண்பர்கள் பிரிந்து வேறு வேறு வேலைகளுக்குப் போகின்றனர்.
நொந்து போகும் நாயகன் ஆனந்த் அப்பாவின் ஆலோசனைப்படி சிங்கப்பூருக்கு மேற்படிப்புக்காகச் செல்ல மீண்டும் நண்பர்கள் இணைந்தார்களா.. எனில் அது எப்படி என்று விவரிக்கும் கதை.
நாயகன் ஆனந்தே இயக்குனராகவும் ஆனதில் அவருக்கான பாத்திர வடிவமைப்பை சரியாக செய்து கொண்டுள்ளார். நண்பர்களைப் பார்க்கையில் அவரது மலர்ச்சி ஆகட்டும், பவானி ஸ்ரீயின் அருகாமையில் மகிழ்ச்சி பெறுவதாகட்டும், கண்ணாடி முன் நின்று ரஜினி போல் நடித்துப் பார்ப்பதாகட்டும், அடுத்த வீட்டு பையன்களைக் காட்டித் திட்டும் அம்மாவிடம் பொங்குவதாகட்டும்… பல்வேறு உணர்ச்சிகளைக் காட்ட சந்தர்ப்பம் வரும் வகையில் அழகாக தன்னைச் சுற்றியே ஸ்கிரிப்ட்டை அமைத்துக் கொண்டுள்ளார்.
அதனால் உடன் வரும் நண்பர்கள் பாத்திரங்களில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் யாரோ ஒருவர் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறார். எந்த நண்பனுக்கும் குறிப்பாக முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது.
ஆனந்தின் அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல், அம்மா விஷாலினி, பாட்டி குல்லபுலி லீலா ஆகியோர் நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
தோழர்கள் மற்றும் தோழிகளாக நடித்திருக்கும் அத்தனை பேரும் இயல்பாக நடித்திருப்பது பாராட்டும்படி அமைந்திருக்கிறது.
படத்தை வெளியிட்டு இருக்கும் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் இருவரையும் கூட படத்துக்குள் கொண்டு வந்திருப்பது ஆனந்தின் திறமைதான்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் இந்தப் படத்துக்காக நிறைய பாடல்களை இசைத்து இருக்கிறார் ஆனால் எதுவுமே நினைவில் நிற்காமல் இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் ரசிகராக ஆனந்த் இருப்பதால் ரகுமான் பாடல்களைப் பயன்படுத்தி இருப்பது அங்கங்கே இனிமை சேர்த்து இருக்கிறது.
வழக்கமான சினிமா கோணங்களைத் தவிர்த்து இயல்பாக படம் பிடிக்க முயன்று இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன்,
படத்தின் திரைக்கதையில் ஆரம்பித்த காட்சியை எங்கே முடிப்பது என்று தெரியாமல் நிறைய குழம்பி இருப்பது தெரிகிறது.
அதேபோல் எந்தக் காட்சி வேண்டும் அல்லது வேண்டாம் என்கிற விஷயத்திலும் அவர் இன்னும் முன்னேற வேண்டும். எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் காட்சிகள் வளர்ந்து கொண்டே போகின்றன.
உண்மையில் இந்த நண்பர்கள் ஒன்றாக சுற்றுகிறார்களே தவிர ஒருவருக்கொருவர் எந்த இடத்திலும் பெரிதாக உதவிக் கொள்ளவில்லை.
யாரை எதிரியாக ஆனந்த் நினைத்திருந்தாரோ அவர்தான் ஆனந்தின் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் உதவி அவரை உயர்த்துகிறார்.
20 நிமிடங்களுக்கு மேல் குறைத்தால் கொஞ்சம் ரசிக்க முடியும்.
நண்பன் ஒருவன் வந்த பிறகு – விண்ணைத் தொட முயற்சிக்கும் சிறகு..!