தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’.
அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான்.
இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம் தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக வருகிறார் அவர். ‘நாற்காலி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் தமிழக அரசியலை நையாண்டியுடன் விமர்சிக்கப் போகிறாராம் அவர்.
இந்த வாரம் சுந்தர்.சி நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘இருட்டு’ படத்தை இயக்கியிருக்கும் வி.இஸட்.துரை இயக்கத்தில் அமைந்திருக்கும் இந்தப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம்பாவா தயாரிக்கிறார்.
இன்று சென்னையில் தொடங்கியிருக்கும் படத்தில் அமீருடன் இமான் அண்ணாச்சியும், இயக்குநர் சுப்ரமணிய சிவாவும் முக்கிய வேடமேற்கிறார்கள். சாந்தினி தமிழரசன் கதை நாயகியாகிறார்.
இயக்குநர் விஜய்யின் பல படங்களுக்கு முதுகெலும்பாக இருந்த எழுத்தாளர் அஜயன் பாலா இந்தப்படத்தின் உரையாடல் பகுதிகளை எழுதியிருக்கிறார்.
அரசியல் சட்டையரிலும் அதகளப்படுத்துவார் அமீர் என்று நம்பலாம்.