ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் கையாண்டும் இன்னும் வரும் இயக்குநர்களுக்கு அந்தக் கதையின் மேலுள்ள மோகம் தீரவில்லை.
இதுவும் வெண்ணிற இரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுதான்.
பறவைகள் ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞராக வரும் நாயகன் ஸ்ரீ ராம் கார்த்திக் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு அரிய பறவையைத் தேடி வருகிறார்.
ஆனால் “காட்சி வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்..” என்கிற கதையாக பறவையை படம் பிடிக்கப் போனவர் ஒரு பாவையை கண்டு காதலிக்கத் தொடங்குகிறார்.
அது வேறு யாருமில்லை நாயகி க்ரிஷா குரூப் தான்.
ஆனால் ஏற்கனவே சித்தி கொடுமையில் சிக்கித் தவிக்கும் க்ரிஷா வீட்டை விட்டு எப்படி வெளியேறுவது என்று யோசித்து அவர்கள் வீட்டில் குடியிருக்கும் ஒரு பொறியாளரை அவர் அறியாமல் காதலிக்கத் தொடங்குகிறார்.
ஆனால் காதலிக்கத் தொடங்கிய மறுநாளே அந்த பொறியாளர் ஊரை விட்டு போய் வடுகிறார். அவர் வருவாரா என்று க்ரிஷா ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்க, தனக்கு கிடைப்பாரா என்று ஸ்ரீராம் கார்த்திக் ஒரு பக்கம் ஏங்கிக் கொண்டிருக்க…
ஆனால், காணாமல் போன பொறியாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்ரீராமிடமே ஒப்படைக்கிறார் க்ரிஷா.
காணாமல் போன பொறியாளர் திரும்பி வந்தாரா, க்ரிஷாவின் காதல் கைகூடியதா, ஸ்ரீராம் கார்த்திகேயன் காதல் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கெல்லாம் மீதிப் படம் பதில் சொல்கிறது.
நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஸ்ரீராம் கார்த்திக்குடன் நாம் எளிதாகக் கதையை கவனிக்க முடிகிறது. அவரும் காதலிப்பது மட்டுமே நம் வேலை என்கிற கதியாக பொறுப்பாக காதலித்துக் கொண்டிருக்கிறார்.
க்ரிஷாவுக்கு திரிஷா போலவே உயரம் உடல்வாகு எல்லாம் இருந்தும் முக பாவனைகளை மிகச் சரியாக வெளிப்படுத்தி நடிப்பதில் மட்டும் கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது.
தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஒன்றாவது அச்சு பிச்சு அப்பாவி கதாநாயகி ஆகிறார் க்ருஷா.
பொறியாளர் வேடத்தில் வரும் இளைஞரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
காமெடியே தேவைப்படாத இந்தப் படத்துக்கு காமெடியன்களாக வந்து தங்களால் ஆனவற்றை செய்து விட்டு போயிருக்கிறார்கள் முனிஷ் காந்த் ராமதாஸ் மற்றும் சிங்கம் பலி.
கிருஷாவுக்கு ஐடியாக்கள் தந்து அவரைக் குழப்பி விடும் அந்த பொடியன் பாத்திரம் பாக்கியராஜ் படங்களை நினைவு படுத்துகிறது.
படத்தின் ஆகப்பெரிய இரு பலங்கள்… இசைஞானியின் இசையும் செழியனின் ஒளிப்பதிவும்தான்.
இந்த காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டது ஊட்டியில் தானா அல்லது ஐரோப்பா தேசத்திலா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு செழியன் லொகேஷன் களைப் பிடித்து இருக்கிறார்.
பாடல்களையும் எழுதி அதற்கு பக்குவமான இசையமைத்திருக்கும் இளையராஜா பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அஜயன் பாலா, இலக்கியம் போல் ஒரு படத்தை கொடுத்து விட வேண்டும் என்கிற ஆவலில் இந்த படத்தை எடுத்திருப்பது புரிகிறது.
ஆனால், இன்றைய சினிமாக்களின் போட்டியில் வெல்வதற்கு திரைக்கதையில் இன்னும் பல திருப்பங்களை கொடுத்திருக்கலாம்.
இருந்தாலும் இந்த வருட காதலர் தின வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த படம் அதற்கு பொருத்தமான தேர்வுதான்.
மைலாஞ்சி – சட்டென்று மாறுது வானிலை..!
– வேணுஜி