February 18, 2026
  • February 18, 2026
Breaking News
February 18, 2026

மை டியர் டாலி திரைப்பட விமர்சனம்

By 0 18 Views

பரிசுத்தமான காதல் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்லும் கதை.

நாயகன் விஜே பப்பு, அறிமுக நாயகி அனுபமாவை பெண் பார்க்க வருகிறார். அப்போதுதான் தெரிகிறது இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தவர்கள் என்று.

அதுவும் பாப்புவின் மேலதிகாரியாக இருந்து நிறைய அவரைத் திட்டித் தீர்த்தவர் அனுபமா என்பதும், அப்போதும் கோபப்படாமல் அவர் மீது அன்பு பாராட்டியவர் பப்பு என்பதும் தெரிகிறது.

தனக்கு திருமணமே வேண்டாம் என்ற நினைவில் இப்போது இருக்கும் அனுபமாவுக்கு பப்பு ஒரு ஆலோசனை சொல்கிறார் அதன்படி இருவரும் ஊருக்காகத் திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களில் விவாகரத்து செய்து விடலாம் என்பதுதான் அது.

அதற்குப்பின் தன் திருமணம் குறித்து யாரும் தொல்லை தர  மாட்டார்கள் என்பதால் அந்த யோசனைக்கு உடன்பட்டு பப்புவை மணக்கும் அனுபமா தன் திட்டப்படி அவரை விவாகரத்து செய்ய முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.

அப்படியெல்லாம் பிரிந்து விட மாட்டார்கள் கடைசியில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கும். ஆனால் அதை இதுவரை நாம் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் சொல்லி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஏ.அரவிந்த்ராஜ்.

கொஞ்சம் அரைகுறை – ஆனால் மனது நிறைய அன்புள்ளம் கொண்டவர் என்ற பாத்திரத்துக்கு விஜே பப்பு மொத்தமாகப் பொருந்தி இருக்கிறார். அனுபமா மீது வைத்த காதலுக்காக அவர் எந்தவிதமான மரியாதைக் குறைவையும் ஏற்றுக் கொள்வது அவர் கொண்ட காதலின் புனிதத் தன்மையை காட்டுகிறது.

புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு அனுபமாவும் அனுபவம் வாய்ந்த நடிகை போலவே நடித்திருக்கிறார். 

படத்தின் இரண்டாவது பாதியில் அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் வேடம் மிகவும் சிக்கலானது. சவாலான அந்தப் பாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திருக்கிறார் அனு. 

இவர்கள் இருவருமே படத்தின் எல்லா காட்சிகளிலும் ஆக்கிரமிக்க, பப்புவின் அலுவலக நண்பர் நண்பிகளாக வரும் கே பி ஒய் ராஜவேலு, கீர்த்தனா மற்றும் ராஜவேலுவின் மனைவியாக வரும் தாரா, பப்புவின் அம்மா ஆஷா, அப்பா ராஜா மணி, அனுபமாவின் முன்னாள் காதலராக வரும் டோமினிக், பேபி தீக்ஷிதா என அனைவரும் அந்தந்த பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். 

எம் பாசிலின் இசையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பட்ஜெட்டை மட்டும் கொடுத்து பெரிய படமாக கிடைத்தால் மனிதர் அசத்தி விடுவார் என்று தெரிகிறது. 

பாலாஜி கே சேகரின் ஒளிப்பதிவுக்கான சவால் வீட்டுக்குள்ளேயே படம் பிடிக்க நேர்ந்திருப்பது. ஆனால் அதையும் குறை இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் அவர்.

இயக்குனரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு பணியாற்றி இருக்கிறார் எடிட்டர் சித்தார்த் என்பது புரிகிறது. 

கதையை எழுதி இயக்கி இருக்கும் அரவிந்தராஜ், நம்பிக்கை வைக்கக்கூடிய நல்ல இயக்குனராக அடையாளம் தெரிகிறார்.

நம்ப முடியாத விஷயத்தை நம்ப வைப்பது தான் சினிமா. அந்த வகையில்…

ஒரு சின்ன கருவை எடுத்துக்கொண்டு அதை காதல் மற்றும் சென்டிமென்ட் கலந்து அழகாக கொடுத்திருக்கிறார். 

சிறிய பட்ஜெட்டில் திருப்திகரமான படம் எடுப்பது எப்படி என்கிற வித்தை அவருக்கு கை வந்து இருக்கிறது. 

அத்துடன் அனுபமா பெண்ணியமும், கண்ணியமும் மிக்க கேரக்டராக வருவதில் பெண்ணினத்தையும், ஒரு பெண்ணின் கடந்த காலம் பற்றி தெரிந்தும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிராமல் அதை குறையாகவும் உணராமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் பப்பு இருப்பதில் ஆண் இனத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் அவர்.

மை டியர் டாலி – நீயும் பொம்மை நானும் பொம்மை..!

– வேணுஜி