November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 6, 2018

மிஸ்டர் சந்திரமௌலி விமர்சனம்

By 0 1498 Views

இரண்டு யானைகள் மோதிக்கொண்டால் அதில் சிக்கிச் சிதையுண்டு போவது சின்னச் சின்ன எறும்புகள்தான். அதே எறும்பு யானையின் காதுக்குள் போனால் என்னவாகும் என்பதுதான் இந்தப்படத்தின் கருவும்.

இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற ஈகோ போட்டியில் மோத, அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நாயகன் கௌதம் கார்த்திக்கும் சிக்க என்ன நடக்கிறது என்ற கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு.

இன்றைக்கு நாட்டில் அதிக பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்று கால் டாக்ஸிகள். அந்த டாக்ஸிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி என்பது கவனிக்க வைக்கும் அம்சம். அதில் மோதிக்கொள்ளும் இருவர் இயக்குநர் மகேந்திரனும், சந்தோஷ் பிரதாப்பும்.

துடிப்புமிக்க கௌதம் கார்த்திக்கின் உடல் வாகுக்கும், எனர்ஜி லெவலுக்கும் ஏற்ற குத்துச்சண்டை வீரன் வேடம் கிளவுஸும், ‘பஞ்ச்’சும் போல இணைந்து பொருந்தியிருக்கின்றன. அத்துடன் நடிப்பதற்கான இட ஒதுக்கீடும் அமைந்திருப்பதுதான் இந்தப்படத்தின் குறிப்பான சிறப்பு.

அதுவும் பாசம் மிக்க தன் தந்தைக்கு நடந்த கொடுமைக்குப்பின் ஆற்றாமையில் தவிக்கும் காட்சியில் அதிகபட்ச உழைப்பைக் கொட்டியிக்கிறார்.

அது மட்டுமன்றி ஒரு விபத்துக்குப்பின் இரண்டடி தூரம் மட்டுமே பார்வை தெரியும் நிலையில் அதற்குத் தோதாக இரண்டடியில் கைகளை வைத்துக்கொண்டு கணிப்பிலேயே நடந்து செல்வதும் நம்ப முடிகிற நடிப்பின் நேர்த்தி. ரெஜினாவுடனான காதல் காட்சிகளிலும் குலுக்கி ஊற்றிய பீராய் வழிகிறது இளமை.

அவரது அப்பாவாகவே வரும் அப்பா கார்த்திக்கும் நடிப்பிலும் அவரது அப்பாவாகவே கவர்கிறார். அவரை வசனங்களில் வயதானவராகக் காட்டுவதுதான் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஸ்மார்ட்டாகத் தெரியும் அவருக்கு இரண்டு முடியில் வெள்ளையடித்தால் அது நரையா..?

‘ப்ரீமியர் பத்மினி’யைக் கட்டிக்கொண்டு அல்லல் படும் முன்பாதிப் படத்தைவிட சஸ்பென்ஸான அவரது இரண்டாவது பாதி ரசிக்க வைக்கிறது. எப்படி அவரது ‘மிஸ்டர் சந்திரமௌலி’ போர்ஷன் கொண்ட ‘மௌன ராகம்’ பிளாஷ்பேக் ரசிக்க வைத்ததோ அப்படியே இதில் வரலஷ்மியுடன் வரும் பிளாஷ்பேக் ரகம். கார்த்திக்கின் அந்த டிரேட் மார்க் ‘மாடுலேஷன்’ சூப்பர்ப்.

ரெஜினாவை இதற்கு முன் இப்படிப் பார்த்திருக்கிறோமா தெரியவில்லை. லஷ்மி ராய் விட்ட இடத்தை லீஸுக்கு எடுத்ததைப் போன்ற கவர்ச்சிக் குவியலாய் கண்களைக் கவர்கிறார். அதற்குத் தோதான ஆடைகளை வடிவமைத்த காஸ்ட்யூமருக்கும் ‘கங்கிராட்ஸ்..!’

வரலஷ்மியின் என்ட்ரியும், பாத்திர வடிவமைப்பும் கவர்கின்றன. ஆனால், அவர் ஏதோ ஒரு விஷயத்துக்காக கார்த்திக்கைத் துரத்துகிறார் என்று பார்த்தால் ஒரு கட்டத்தில் “நீங்க என் அப்பாவைப்போல் இருக்கீங்க..!” என்று லாஜிக் சொல்வதில் கார்த்திக் அதிர்வது போலவே நாமும் அதிர்கிறோம். பிறகு “அதுக்காக அப்பாவா நினைக்கிறேன்னு அர்த்தம் இல்லை…” என்று ‘வரு’ சொல்லும்போது கார்த்திக் முகத்தில்தான் எத்தனை திருப்தி..?!

இயக்குநர் மகேந்திரன் இரண்டு காட்சிகளில் வந்தாலும் கதையையே அவர்தான் நகர்த்துவது போன்ற அவரது பாத்திரப்படைப்பு ‘பலே’. சந்தோஷ் பிரதாப்புக்கு அளவாகத் தைத்த வேடம் ‘நச்’சென்றிருக்கிறது. அவரை இனி பல படங்களில் நல்ல கேரக்டர்களில் பார்க்க இயலும்.

‘மைம் கோபி’ இந்தப்படத்தில் அதிகமாகவே பயமுறுத்தியிருக்கிறார். முன்பாதியில் அங்கங்கே சிரிக்க வைக்கும் சதீஷுக்கு சீரியஸான பின்பாதியில் பெரிய வேலை இல்லை. சொல்லப்போனால் குலுங்கிக் குலுங்கி அழ நேர்கிற காட்சியமைப்பு.

நடிப்பு ராட்சசியான விஜி சந்திரசேகரை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். முதலாளி அடி வாங்க வேண்டியவன்தான் என்று நினைக்கும் வெங்கட் போன்ற ‘ரொம்ப நல்ல’ மேலாளர்கள் அமையப் பெற்ற முதலாளிகள் உஷார்..!

டிராக்கிலேயே பயணிக்கும் கால் டாக்ஸி போன்றே திட்டமிட்டு ஒரே பாதையில் விரையும் கதை கடைசியில் எடுக்கும் ட்விஸ்ட் எதிர்பார்க்க முடியாதது. பரபரப்பாகக் கடக்கும் இரண்டாவது பாதியில் நேரம் போவதே தெரியாத வேகம்.

ஆனால், ஒரு நண்பராக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் கார்த்திக், அவ்வளவு விஷயம் நடந்திருந்தும் வரலஷ்மி பற்றி கௌதம் அன் கோவிடம் எதையுமே பகிர்ந்து கொள்ளவில்லையென்பதில் நம்பகம் குறைவாக இருக்கிறது. அதற்கென்றே உள்ளே செருகப்பட்ட கேரக்டராக அகத்தியன் வருகிறார்.

படத்தின் பெரும்பலம் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்ஸின் இசையும்தான். ‘ஏதேதோ ஆனேனே…’ பாடலில் இருவரும் கலந்துகட்டி ‘இளமை மேளா’ நடத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, மிக்ஸிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நேர்த்தியாக இருக்கின்றன.

மிஸ்டர். சந்திரமௌலி – காலத்துக்கேற்ற கார்ப்பரேட் கமர்ஷியல்..!