September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • படத்தலைப்புக்கு கமிஷனைக் கட்டுப்படுத்த கே.பாக்யராஜின் யோசனை
July 6, 2018

படத்தலைப்புக்கு கமிஷனைக் கட்டுப்படுத்த கே.பாக்யராஜின் யோசனை

By 0 1079 Views

முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் ‘வீடு புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர்.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.

தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நாயகன், நாயகியாக தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்க, பி. சிதம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Nasser

Nasser

விழாவில் நடிகர் நாசர் பேசியதிலிருந்து…

“வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள்.

அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்..!”

K Bhagyaraj

K Bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதிலிருந்து…

“இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அதுதான் நடனமாடுவது. இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறன. இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்து விடக் கூடாது. பொழுதுபோக்குக்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் அந்தப் படங்களை ரசிகர்கள் விரும்புவார்கள்.

இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாகப் பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்..!”