November 8, 2026
  • November 8, 2026
Breaking News

மூக்குத்தி அம்மன் 2 திரைப்பட விமர்சனம்

By on November 6, 2026 0 7 Views

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், நயன்தாராதான் மூக்குத்தி அம்மன் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு போனால் இந்தப் படத்தில் ‘சுந்தர் சி பிராண்ட்’ அனுபவம் கிடைக்கும். 

போலீசில் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் நயன்தாரா, சும்மா சாமி வருவது மாதிரி பூச்சாண்டி காட்டி பணியிலிருந்து அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொள்பவர்.

ஆனால் இரவுகள் தோறும் ஒரு வித்தியாசமான கனவு வந்து அவரை மயிலாஞ்சி என்ற ஊருக்கு அனுப்புவதில் குறியாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல் வேறு பல அமானுஷ்யமான சம்பவங்களும் நடந்து அவரை மயிலாஞ்சிக்குத் தள்ளுகின்றன. அங்கே என்னதான் நடக்கிறது என்று அறிந்து கொள்ள, விருப்பத்தின் அடிப்படையில் அந்த ஊருக்கு மாற்றல் வேண்டி அம்மா ஊர்வசியுடன் வந்து சேர்கிறார்.

அந்த மயிலாஞ்சியில் யாரும் போகாத காடு ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டுக்குள் 2000 ஆண்டுகளுக்கு முன் சமாதியாகிப்போன துஷ்ட சக்தியான ரெஜினா காசன்ட்ராவை எழுப்பும் முயற்சியில் மந்திரவாதி சுனில் வர்மா ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த காட்டுக்குள் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள செல்லும் நயன்தாரா புதையுண்டு போன ஒரு ரகசிய கோயிலைக் கண்டுபிடிக்கிறார். 

அதுதான் மூக்குத்தி அம்மன் கோயில் என்று ஊராரால் அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அங்கே மூக்குத்தி அம்மன் இல்லை. அந்த அம்மன்தான் இப்போது மனித ரூபத்தில் நயன்தாராவாக இருக்கிறார் என்கிற உண்மையும் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு ஊர் மக்களுக்கு அது தெரியாது. 

அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிர்த்தெழும் ரெஜினா, நயன்தாராவை கொல்வதற்காக தேடி அலைகிறார். அவருடன் மோசமான அரசியல்வாதி பழ. கருப்பையாவின் மகனான துனியா விஜயும் சேர்ந்து கொள்ள, யார் யாரை பழிதீர்த்தார்கள்? யார் வென்றார்கள்..? என்பதுதான் மீதிக் கதை.

படத் தொடக்கத்தில் சாமி ஆடுவது போல் நடித்தாலும் கடைசியில் சாமியே அவர்தான் என்கிற அளவில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பாவியாக ஒரு முகத்திலும் அதன் பிறகு அதற்கு காரணமான பாவிகளை பழி தீர்க்கும் ஆக்ரோஷ அம்மனாகவும் இன்னொரு முகமும் காட்டி அதகளம் புரிகிறார் நயன்ஸ்.

ஆனால் அப்பாவி முகத்தைக் காட்டிலும் அம்மன் முகம்தான் நம்மை அதிகம் ரசிக்க வைக்கிறது.

சாமியையும் சாத்தானையும் பெண்களாகவே உருவாக்க சுந்தர் சியால் மட்டும்தான் முடியும். அதன்படி சாத்தான் ஆக வரும் ரெஜினா காசன்ட்ரா, உடல் மொழியில் வில்லாக இருப்பது மட்டுமில்லாமல் வில்லியாகவும் முத்திரை பதிக்கிறார். 

அவரது 2000 ஆண்டு காதலராக வரும் துனியா விஜயின் வில்லத்தனமும் மிரள வைக்கிறது. 10 டன்லப் டயர்களை ஒன்றாக அடுக்கியது போல் தெரியும் அவர், ராட்சச டயர்களை உருட்டி உடற்பயிற்சி செய்வது மலைக்க வைக்கிறது. 

நயன்தாராவின் அம்மாவாக வரும் ஊர்வசி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. அதேபோல் மைலாஞ்சியில் எல்லாரிடமும் பணத்தை ஆட்டையைப் போடும் யோகி பாபுவை திருடன் என்று நினைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு நயன்ஸ் தூக்கி வந்தால், அவரைப் பற்றித் தெரியும் இன்னொரு உண்மை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

சங்கராச்சாரியாரை போன்ற மடாதிபதி ஒய் . ஜி.மகேந்திராவை போட்டு தள்ளி சாத்தான் பக்கம் நிற்கும் சுனில் வர்மாவும், நரபலி கருடா ராமும் மிரட்டுகிறார்கள். ஆனால் பொது வெளியில் வரும்போதும் அவர்கள் அந்த மந்திரவாதி உடையிலேயே வருவது சரியா சுந்தர் சி சார்..?

இவர்களுடன் அபிநயா, ஸ்ருதி.எஸ், மைனா நந்தினி, சிங்கம்புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார்.எஸ் உள்ளிட்டவர்கள் அந்தந்த பாத்திரங்களில் சரியாகப் பொருந்தி இருக்கிறார்கள். 

படம் முழுவதும் பளிச்சென்று மின்னல் வெட்டியது போல் இருப்பதற்கு ஒரே காரணம் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். 

இந்த ஜென் z யுகத்தில் பக்தி பாடல்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றன ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில். பல தியேட்டர்களில் பக்தி பரவசமானவர்களை சாமியாட வைக்கும் அவரது இசை.

வெங்கட் ராகவனின் திரைக்கதை வசனத்தை தன் வாகுக்கு கொண்டு வந்து தன்னுடைய பிராண்ட் ஆகவே மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

பின்னால் வரப்போகும் மூக்குத்தியம்மனே அவர்தான் என்கிற அளவில் ஆரம்பத்தில் நயன்தாராவை எந்த பில்டப்பும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகப்படுத்தி, போகப் போக அந்த கேரக்டருக்கு பலம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது. 

அத்துடன் மூக்குத்தி அம்மனின் சகோதரிகளாக இருக்கும் அம்மன்களுக்கு குஷ்புவையும் சினேகாவையும் தேர்வு செய்திருப்பதுடன் அவர்களுக்கான மேக்கப்பிலும் மெருகூட்டி நிஜமான அம்மன் நேரில் வந்தாலும் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பாத்திரங்களுக்கு சக்தி கொடுக்க சுந்தர் சியால் மட்டுமே முடியும்.

அதுவும் மூக்குத்தி அம்மன் கோயில் கண்டுபிடிக்கப்படும் காட்சியில் நயன்தாரா, மண் சரிவில் சறுக்கி கொண்டே வந்து ஓரிடத்தில் குத்திட்டு அமர, அந்த இடத்தின் மண் விலகும் போது அது மூக்குத்தி அம்மனின் வாகனமான சிங்க சிலையாக இருப்பது சிலிர்க்க வைக்கிறது.

இந்த சிலிர்ப்புகள் அடங்க வெகு நாள் ஆகும் என்கிற நிலையில் இதன் அடுத்த பார்ட்டையும் அவர் ரெடி பண்ணக் கூடும்.

மூக்குத்தி அம்மன் 2 – டபுள் ஆக்சன் சக்தி..!

– வேணுஜி