November 6, 2026
  • November 6, 2026
Breaking News
November 7, 2026

நூறு கோடி வானவில் திரைப்பட விமர்சனம்

By 0 6 Views

கோவாவில் தொடங்குகிறது கதை. பால்கோவா போலிருக்கும் சித்தி இத்னானி, அங்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். அம்மா டூரிசத்தில் வேலை பார்க்க, அவரது பாட்டி கோவை சரளா அந்தக் காலத்தில் கோவா வழிகாட்டியாக இருந்தவர். சித்தியின் கனவு ஒரு டிவி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பது. 

அங்கே கட் பண்ணி மும்பை வந்தால், நாயகன் ஹரிஷ் கல்யாண் ஒரு டிவி சேனலில் இயக்குனராக இருக்கிறார். அவரது பதவி உயர்வு எதிர்பார்த்திருக்கும் வேலையில் அது அவர் கையை விட்டு போய்விட, கோவாவில் இருக்கும் இந்த சேனலின் கிளையை மேம்படுத்த அங்கு அனுப்பப்படுகிறார். 

இதே வேளையில் சித்தி இத்னானியின் காதலர் எம். ரினில், விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கிறார். அவருக்கு சித்தி டிவி தொகுப்பாளராக ஆசைப்படுவது பிடிக்காது. அவருக்கு வைத்தியம் பார்த்து குணமாக்க சிந்தி போராடி வரும் நிலையில், அவருக்கு பிடித்தமான டிவி தொகுப்பாளர் வேலை ஹரிஷ் கல்யாண் மூலமாக கிடைக்கிறது. 

ரினிலின் சிகிச்சைக்கான பணமும் கிடைக்க அதை செய்து வரும் நிலையில் ஹரிஷ் கல்யாணின் காதலுக்கு இலக்காகிறார் சித்தி. 

இந்நிலையில் ரினில் கண் விழித்து விட, அவருக்கு பிடிக்காத வேலை செய்து வரும் சித்தியை கண்டிக்கிறார் அவர். இதன் காரணமாக அவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்பட்டு நடந்த கைகலப்பில் தலையில் அடிபடும் ரினில் மீண்டும் கோமாவுக்கு போக சிந்தி மீதான ஹரிஷ் கல்யாணின் காதல் வலுப்பெற… அதற்குப்பின் என்ன ஆனது என்பது மீதி கதை.

ஹரிஷ் கல்யாணின் வயதுக்கும் வாலிபத்துக்கும் ஏற்ற அருமையான வேடம். அந்த நீளமுடியுடன் அமர்க்களமாக இருக்கிறார். சித்தியை கண்டதும் காதல் வயப்படும் அவர் அதற்கு பின்னர் அவருக்கு இன்னொரு காதல் இருப்பது தெரிந்தும், அதிலிருந்து வெளியே வர முடியாத தவிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். உணர்ச்சிமயமான காட்சிகளில் இன்னும் அவர் நடிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும்.

வாழ்க்கையின் லட்சியமே டிவி தொகுப்பாளராக ஆவதுதான்  என்ற நிலையில் அது வாசல் கதவை தட்டும் போது அதெல்லாம் செய்ய மாட்டேன் என்று சித்தி இத்னானி பிகு பண்ணுவது பொருத்தமாக இல்லை.  ஆனால் அவர் செய்யும் எல்லா தவறுகளையும் அவருடைய அழகுக்காகவும் அந்த கன்னக் குழிக்காகவும் மன்னித்து விடலாம்.

சித்தியின் காதலனாக வரும் ரினில், நமக்கு அறியாத முகமாக இருப்பதால் அவருடன் சிந்தி இணையும் வாய்ப்பு இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. ஆனால் சுயநலம் பொருந்திய அந்த பாத்திரத்தில் ரினில் அற்புதமாகப் பொருந்தி இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் கோவா டீமில் வரும் விஜே பார்வதி வழக்கமாக வடிவேலு, யோகி பாபு இல்லாத குறையை நிறை செய்திருக்கிறார். அங்கங்கே அவர் அடிக்கும் பஞ்சுகள் ‘நச்..!’

ஆனால் சில இடங்களில் அது எல்லை மீறிப் போய் விடுகிறது. குறிப்பாக சித்தி மீதான ஹரிஷ் கல்யாணின் காதல் வெற்றி பெற, கோமாவில் கிடக்கும் ரினிலை கொன்று விடவா என்பது போன்று அவர் அடிக்கும் ஜோக்குகள் சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக அதிர்ச்சியை வரவழைக்கின்றன.

கோவை சரளா மற்றும் தம்பி ராமையா இருவருமே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர்கள். அவர்களை மீட்டருக்கு மேல் போகாமல் கட்டுப்படுத்தி வேலை வாங்கி இருப்பது இயக்குனரின் திறமை.

மும்பை, கோவா என்ற லொகேஷன்கள் அமைந்தால் சும்மா விட்டு வடுவாரா ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார்..? அப்படியே கலர்ஃபுல்லாக வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா வழியில் அருமையான காதல் பாடல்களை நமக்கு கொடுத்து வரும் இசையமைப்பாளர் சித்து குமார். இந்தப் படத்தில் இணைந்து மனதை தொடும் பாடல்களை தந்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சசி, இந்த காதல் படத்தில் ஊரறிந்த மெல்லிய லைனை எடுத்துக்கொண்டு, அதை திரைக்கதையில் சுவாரஸ்யபடுத்த முயன்றிருக்கிறார். ஆனால் இந்த கதை இப்படி போய் இங்கேதான் நிற்கும் என்று நாம் எதிர்பார்ப்பது அப்படியே நடந்து விடுகிறது. 

ஆனால் வசனங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் இருந்து பிரித்து எடுத்தவை யாக மின்னுகின்றன. 

இந்தப் படத்தை பார்க்க வேண்டுமானால் ஜி5 ஒரிஜினல் சேனலில் பார்க்கலாம். 

நூறு கோடி வானவில் – காதல் ஒரே நிறம்..!

– வேணுஜி