December 27, 2024
  • December 27, 2024
Breaking News
December 16, 2024

மிஸ் யூ திரைப்பட விமர்சனம்

By 0 122 Views

‘கட்டாயத்தால் காதல் மலராது – ஆனால் காதலித்தால் கட்டாயம் வாழ்க்கை மலரும்’ என்ற ஒன்லைன் கொண்ட கதை.

ஒரு விபத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்கிற கதியாக சில வருட நினைவுகளை மறந்து போகிறார் சித்தார்த் ஒரு மாறுதலுக்காக அவர் பெங்களூர் போக அங்கே நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்து காதல் கொள்கிறார். 

ஆனால் ஆஷிகா அவர் பக்கம் திரும்பவே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதும், சித்தார்த்தின் காதல் வெற்றி பெற்றதா என்பதும் மீதிக் கதை.

சித்தார்த் தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் இன்னும் சின்னப் பையனாகவே தெரிகிறார். அதனால், காதல் கதைகளில் நடிப்பது  துருத்தலாகத் தெரியவில்லை. அவருடைய பிளஸ்-ம் மைனசும் இன்னும் பாய்ஸ் படத்தில் பார்த்தது போலவே நடித்துக் கொண்டிருப்பது…

சித்தார்த்துக்கு மட்டுமல்ல, யாருக்குமே நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்ததும் காதல் கொள்ளத்தான் தோன்றும். இயல்பான அழகிலும், நடிப்பிலும் மனதைக் கொள்ளை கொள்கிறார். 

சித்தார்த்தின் நண்பர்களாக வரும் பாலசரவணன், லொள்ளு சபா மாறன் அங்கங்கே ரசிக்க வைத்தாலும், திடீர் நண்பராக அறிமுகமாகும் கருணாகரன் இரண்டாவது நாயகனாவே கவர்கிறார். 

சிறிது காலமாக கவனத்தைக் கவராமல் இருந்த கருணாகரனுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்திருக்கிறது எனலாம். புத்திசாலித்தனமான வசனங்களை அற்புதமான டைமிங்கில் பேசி அசத்தியிருக்கும் கருணாகரன் இந்தப் படம் மூலம் மீண்டும் பிஸியாவார் என்று எதிர்பார்க்கலாம்.

“ஏதோ ஒரு இடத்துக்குப் போறதுக்கு என் கூட பெங்களூர் வாங்க..!” என்று சித்தார்த்தை அழைத்துக் கொண்டு போய் அவர் வாழ்வில் திருப்பத்தைத் தரும் கருணாகரனைப் போல நண்பர்கள் அமைந்தால் எல்லோருக்குமே வாழ்க்கை கலகலப்பாகும்.

இவர்களுடன் சஷ்திகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகஷ், ரமா, அனுபமா குமார், சரத் லோகித்ஸவா என்று எல்லா வேடங்களில் நடித்திருப்பவர்களும் அந்தந்த பாத்திரங்களுக்கு பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு ரசனையான படத்துக்காகதான் காத்திருந்தேன் என்பது போல் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தக் காதல் படத்தில் கலக்கி இருக்கிறார். படம் முடிந்தும் கடிதம் அவர் இசை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

படத்தில் வரும் ஒவ்வொரு விஷயங்களையும் மேலும் வனப் பூட்டி காட்டி இருக்கிறது கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவு.

இந்தப் படத்தின் மூலம் ரசனையான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் என். ராஜசேகர்.

வித்தியாசமான காதல் களத்தை இத்தனை ரசனையுடன் கொடுத்து இருந்தாலும், படத்தின் முக்கிய திருப்பத்திற்கு காரணம் ஒரு அரசியல்வாதியும் அவர் மகனும் என்பது ரொம்பவும் பலவீனமான ஐடியாவாக இருக்கிறது. அதையும் எதாவது வித்தியாசமாகப் பிடித்திருந்தால் படம் முழுமை பெற்று இருக்கும். 

இருந்தாலும் இளசுகள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம் மிஸ் யூ..!

– வேணுஜி