தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து இன்று நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.
கொரோனாவுக்காக மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ.6,000 கோடி அளவுக்கு நிதியினை செலவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ரூ.3,000 கோடி நிதி உதவி கோரியுள்ளார்.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2,000 ஆய்வக உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவலை தொடர்ந்து மருத்துவமனைகளில் 70 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.