November 12, 2025
  • November 12, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பரபரப்பான திரில்லராக மாறும் குடும்பக் கதை ‘ மிடில் கிளாஸ்..!’
November 9, 2025

பரபரப்பான திரில்லராக மாறும் குடும்பக் கதை ‘ மிடில் கிளாஸ்..!’

By 0 101 Views

“என்னுடைய மிடில் கிளாஸ் திரைப்படம் ஒரு குடும்பத்தை அருகில் இருந்து பார்க்கும்  அனுபவத்தைத் தரும்..!” என்று முத்தாய்ப்பாக ஆரம்பித்தார் அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனம் சார்பில் தேவ், கே வி துரை இணைந்து தயாரிக்கும் மிடில் கிளாஸ்.பட இயக்குனர் கிஷோர் எம்.ராமலிங்கம்

இந்தப் படத்தில் முனிஷ்காந்த் குடும்ப தலைவனாக நடிக்க அவரது மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார் என்பது ஹைலைட் ஆன விஷயம்.

இம்மாதம் 21ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் 11-ம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்  இயக்குனர் கிஷோர் எம். ராமலிங்கம், முனிஷ் காந்த் ராமதாஸ், விஜயலட்சுமி படத்தை தயாரித்திருக்கும் துரை மற்றும் தேவ்.

தொடர்ந்து பேசினார் இயக்குநர்.

“குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இரண்டு வேறுபட்ட மனநிலையில் இருப்பவர்கள் பற்றிய படம் இது. அதில் முனிஷ்காந்த் ராமதாஸ், விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள்.

முனிஷ் காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே  வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.

இதில் விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஷ்காந்த் அதை சர்ச்சையாக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படி சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.

முதல் அரை மணி நேரம் குடும்ப கதையாக செல்லும் படம் பின்னர் யூ ட்யூப் பற்றிய கதையாக மாறி அதன் மூலம் இந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறேன்..!” என்றவர்,

“முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது முதலில் தயங்கினார். “நான் ஹீரோ கிடையாது. இந்த கதைக்கு எப்படி பொருந்துவேன்.?” என்று கேட்டார்.

ஆனால் “இந்த கதாபாத்திரம் குணச்சித்திரம், காமெடி, செண்டிமெண்ட் என்ற எல்லா பரிமாணங்களும் கொண்ட பாத்திரமாக இருப்பதால் பொருத்தமாக இருப்பீர்கள்..!” என்று விளக்கிக் கூறி சம்மதிக்க வைத்தேன்.

அதேபோல் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த விஜயலட்சுமியிடம் இந்த கதையை கூறச் சென்றபோது முழு கதையையும் கேட்டுவிட்டு இதில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தையும் உணர்ந்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

அவர்கள ராதாரவி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் குரோஷி ஆட்டோ டிரைவராகவும் நடிக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, கோடாங்கி வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மாளவிகா அவினாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..!” என்று முடித்தார்.

சுதர்சன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணனிடம் பணியாற்றிய பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார். பாடல்களை மோகன் ராஜா கதிர் மொழி, ஏகன் எழுதுகிறார்கள்.

முனிஷ்காந்த் ராமதாஸ் பேசும்போது,

“நான் ஹீரோவெல்லாம் கிடையாது. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். இதில் கதைக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்று இயக்குனர் கேட்டதால் நடிக்க ஒப்புக்கொண் டேன். குடும்ப தலைவனாக ஒரு அருமையான பாத்திரம்.

சில காட்சிகளில் காமெடி வைக்க வேண்டும் என்று நான் கூறியபோது கூட அதை இயக்குனர் ஏற்கவில்லை. இந்த கதைக்கு இவ்வளவு நடித்தால் போதும் என்று என்னை நடிக்க வைத்தார். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகி விஜயலட்சுமி, ”நிறைய படங்களில் நான்  நடிப்பதில்லை. காரணம் கதாபாத்திரம் நன்றாக இருந்து கதை சரியாக இல்லாவிட்டால் அந்த படம் வெற்றி பெறுவது கடினம். அதனால் கதாபாத்திரமும் வீணாகிவிடும். அதனாலேயே நான் முழு கதையையும் கேட்டு அந்த படம் மக்களுக்கு பிடிக்கும், வரவேற்பு பெறும் என்று எண்ணினால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள் கிறேன்.

மிடில் கிளாஸ் பட கதையை இயக்குனர் என்னிடம் கூறிய போது கதை மிகவும் பிடித்தது. உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்..!” என்றார்.

தயாரிப்பாளர் கே.வி.துரை கூறும்போது,”இந்தக் கதையை (மறைந்த) டில்லி பாபு சார் தான் கேட்டார். பிடித்துப் போகவே தயாரிக்க ஒப்புக்கொண்டார். சரியான படங்களை அவர் எப்போதும் தேர்வு செய்வார் அந்த வகையில் மிடில் கிளாஸ் படமும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்..!” என்றார்.

அப்படியே ஆக வாழ்த்தி விடை பெற்றோம்..!

– வேணுஜி