November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்
April 2, 2019

இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்

By 0 971 Views
இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:
 
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது’ என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி மேடையிலேயே எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்ததும், பிறகு சட்டம் பயில சென்னைக்கு வந்த நான், தொடர்ந்து படிக்க வழி யில்லாமல் ஒரு பத்திரிகையாளனாக மாறியதும், ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் முழுமையாக வெறுத்த தமிழ் சினிமாவிற்குள் மதிப்பிற்குரிய அந்த மாமனிதர் என்னை வலுக் கட்டாயமாக இழுத்து வந்ததையும் பல பத்திரிகைகளில் நான் எழுதி நீங்களும் ஏற்கெனவே  அறிந்திருப் பீர்கள்.
 
இப்போது உங்களின் கேள்வியில் “ஃபார்முலா படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்.’ எனக் குறிப்பிடுகிறீர்கள். அவர் அப்படிப்பட்ட நடிகர்தான் என்றாலும், சினிமா பற்றி முழுமையான அறிவாற்றல் கொண்டவர்! ஹாலிவுட் படங் களைப் பார்த்தவர் என்பதால்  இருக்கலாம். ஆனால் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறன் படைத்தவர். தமிழ் சினிமாவின் நிகழ்காலம், வருங்காலம் பற்றி யெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர். எதிலும் அவருக்கு “தீர்க்க தரிசனம்’ உண்டு என்று சொன்னால்கூட அது மிகையல்ல.
 
நான் அவரது லாயிட்ஸ் ரோடு வீட்டில் தங்கி, “பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், நான் தொடர்ந்து எழுதிக் களைப் படையக் கூடாது என்று சொல்லி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, நான் படித்த கதைகள், எழுதிய கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பார். தனது இனிய நாடக அனுபவங்களையும் என்னு டன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம்-
 
“எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே… உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?” என்று கேட்டேன்.
 
அதற்கு அவர் சொன்னார்: “நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். இன்றைய சினிமா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கும் உடன்பாடானது என்பதால்தான் தானே உங்களைப் பாராட்டி மேடையில் வைத்தே கடிதம் எழுதிக் கொடுத்தேன். பேசுவதற்காக உங்களுக்கு மூன்று நிமிடங்களே தரப்பட்டிருந்தும், நீங்கள் 45 நிமிடங்கள் பேசுகிற அளவிற்கு உங்கள் பிரின்சிபாலிடம் கேட்டுக் கொண்டதும் நான்தானே.
 
MGR

MGR

ஆரம்பகால தமிழ் சினிமா வில் நாங்கள் எல்லாம் பாகவதர் கிராப் வைத்திருந்தோம். இன்று மாடர்னாக விக் வைத்துக் கொள்கிறோம். அன்றைய படங்களில் 50, 60 பாடல்கள் இருந்தன. இன்று 6, 7 பாடல்கள்தான். அந்தக் காலத்துப் படங்களில் நாங்கள் வசனம் பேசும் முறை முற்றிலுமாக மாறி, தற்போது வசனம் யதார்த்தமாகப் பேசும் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல எத்தனையோ மாற்றங்கள்.

 
நீங்கள் அன்று என் முன்னால், “சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்’ என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில்  வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம். இதே ரசிகர்கள் எதிர்காலத்தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைதான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடுகளைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்..!”
 
இப்படி அவர் சொல்லச் சொல்ல அவர்மீது எனக்கிருந்த  மட்டற்ற மதிப்பும், அவரது வியக்கத்தக்க சினிமா பற்றிய கண்ணோட்டத் தின் மீதான பிரமிப்பும் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து கொண்டே போனது.
 
பின்னாளில் நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை பிரத்தியேகக் காட்சியாக அவருக்குக் காட்டினேன். படம் முடிந்ததும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டவர், “உண்மையான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது.
 
நமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமாவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு..!” என்றார் அந்தப் பண்பாளர்.
 
“நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், “காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்…” என்றேன்.
 
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், “குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்’ என்று ஆசீர்வதித்தார்.
 
(எம்ஜிஆருடன் இத்தனை நெருக்கமாகப் பழகியிருந்தும் அவருடன் ஒரு புகைப்படம் கூட மகேந்திரன் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான மற்றும் துரதிர்ஷ்டவசமான செய்தி…) 
 
News Courtesy – Anthai Kumar