April 13, 2025
  • April 13, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்
April 28, 2020

ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்

By 0 760 Views

நடிகை ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோயில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசியுள்ளார்.

ஆனால், அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டித் திரித்து அவர் கோயில்களுக்கு எதிராகப் பேசிவிட்டது போல சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது பேச்சை முழுமையாகக் கேட்கும் யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகவும் அவர் பேசவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசு மருத்துவமனைகள், பள்ளிகளின் அவசியத்தையும் மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், கொடூரமான இந்தக் கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளின் அருமையை அனைவரும் உணர்ந்துள்ளனர். அந்த மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

கரோனா காலத்தில் மத்திய-மாநில அரசுகளின் போதாமை அம்பலமாகி வரும் நிலையில் அதை திசை திருப்புவதற்காகவே சமூக ஊடகங்களில் சில மதவெறி சக்திகள் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி மக்களது கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன. ஜோதிகாவையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் அநாகரிகமான பதிவுகளை சமூக ஊடகங்களில் சிலர் எழுதி வருகின்றனர்.

அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் நாகரிகமான முறையில் மறுப்பு சொல்லி விவாதிக்கலாம். கடவுள் உண்டா, இல்லையா என்கிற விவாதம் கூட பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது, இத்தகைய விவாதங்களை இப்போதும் நடத்துவதற்கான உரிமையை நம்முடைய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.

ஆனால், சமீபகாலமாக சாதி, மத, இனவெறி சக்திகள் ஒருவரது கருத்தை திரித்துக் கூறுவதும், அவதூறு மூலம் அவரது வாயை அடைக்க முயல்வதும் நடந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

திரைக்கலைஞர் ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.