’தூக்குதுரை’ மற்றும் ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்க, இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாகும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.
ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக்.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தை வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் தயாரித்திருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் டீசர் 2 மில்லியனைத்தாண்டிய பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சதிஷ் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
“ஒரு சாமானியன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும்போது அவரால் உதவி பெறறவர்கள் அவரை தெய்வம் என்பார்கள். அப்படி தன்னை சேர்ந்தவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஒரு நன்மையை செய்த படத்தின் நாயகன் செல்வராகவன் எப்படி தெய்வமாகிறார் என்பதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறேன்..!” என்ற இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் தொடர்ந்தார்.
“இது பழி தீர்க்கும் கதை அல்ல. மனிதன் கொலை செய்தால் அது குற்றமாகவும் தெய்வம் செய்தால் அது தண்டனையாகவு ம் பார்க்கப்படும். அப்படிப்பட்ட ஒரு தண்டனையை ஹீரோ கொடுக்க, அது யாருக்கு, எதற்கு என்பது சஸ்பென்ஸ்.
இந்த படம் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும். ஆனால், பாலியல் ரீதியான குற்றங்களைப் பற்றி பேசவில்லை. இந்த நிகழ்வு அனைவரது வாழ்விலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கும், அப்படி நடக்கும் அந்த விசயம் மனித வாழ்க்கையை எப்படி பாதிப்பதோடு, அது ஊர் பிரச்சனையாக எப்படி உருவெடுக்கிறது, என்பதை பற்றி பேசியிருக்கிறோம்..!
ஒரு சாதாரண கிராமத்து மனிதராகவும், அமைதியானவராகவும் இருக்க வேண்டும். எத்தனை முறை அடித்தாலும், எழுந்திருக்க முடியாத ஒரு நபராக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்திற்கு செல்வராகவன் சார் சரியாக இருப்பார், என்று தோன்றவே அவரை தேர்வு செய்தோம்.
அவரும் நேரம் எடுத்துக் கொண்டு திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார். அவர் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்த படம் இது தான். இந்த கதையில் ஒரு வாழ்வியல் இருக்கிறது, நிச்சயம் இதை சொல்ல வேண்டும், என்று அவர் சொன்னார். அதனால் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
கதாநாயகி குஷி ரவி, கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர். இந்தப்பட பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துகிறோம்.
செல்வா சாரின் மாமா பாத்திரத்தில் படம் முழுவதும் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.எஸ்.சதிஷ் நடித்திருக்கிறார். அவரை எனக்கு நடிகராக தான் தெரியும், நான் உதவி இயக்குநராக பணியாற்றிய படத்தில் இவர் நடித்த போது ஏற்பட்ட பழக்கதில் இந்த படத்திற்காக இவரை தேர்வு செய்தேன். நல்ல கதை என்பதால் தயாரிப்பாளராகவும் இணைந்துக் கொண்டார்.
பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் அவருக்கு இந்த படம் முக்கியமான அடையாளத்தை பெற்றுக் கொடுக்கும்.
செல்வா சாரின் அக்கா பாத்திரத்தில் கெளசல்யா நடித்திருக்கிறார்.
இந்தப் படம் அடிநாதமாக காதலை பற்றி பேசுகிறது. அதுவும் திருமணத்திற்குப் பிறகான கணவன் – மனைவி இடையிலான காதலை அழுத்தமாக பேசியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் நகரமலை என்ற கிராமத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். அந்த கிராமத்தில் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை. அந்த மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அதனால், படம் ஒரு வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்யும்..!”
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.எஸ்.சதிஷ் படம் குறித்து கூறும்போது, “வாழ்வில் முன்னேற துடிக்கும் மனிதர். அவர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனையை எதார்த்தமாக பேசியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இது ஒரு விழிப்புணர்வு படமாக மட்டும் இன்றி, குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு நல்ல படைப்பாகவும் இருக்கும்.” என்றார்.
எதிர் வரும் ஏப்ரல் மாதம் படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்..!