April 13, 2026
  • April 13, 2026
Breaking News
April 11, 2026

மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம்

By 0 15 Views

நகர்ப்புறங்களில் கூட சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு கிராமத்தின் சாலை வசதிகள் எப்படி இருக்கும்..?

அப்படி இருக்கிறது கதை நடக்கும் கிராமத்தில். சாலை வசதிகள் மட்டுமல்லாமல் குடிநீர், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் மக்கள் அலைந்து திரிந்து காரியங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மந்திரி ஒய் ஜி மகேந்திராவுக்கு நெருக்கமாக இருக்கும் மைம்கோபி அந்த ஊரில் கந்துவட்டிக்கு காசு கொடுத்து சர்வ வல்லமையுடன் திரிகிறார். 

அங்குதான் நாயகன் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வர, அவருடன் நாயகி குஷி ரவிக்கு திருமணம் நடக்கிறது. ஒன்றுபட்ட தம்பதிகளின் குஷியான வாழ்க்கையைப் பார்த்து எல்லோர் கண்ணும் பட்டுவிடக்கூடிய நிலையில் மனைவியை வசதியுடன் வாழ வைப்பதற்காக கடன்படும் செல்வராகவன் ஒரு உணவு விடுதி ஒன்றை ஆரம்பிக்கிறார். 

இந்நிலையில் மைம் கோபியிடம் கடன் வாங்கிய ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். இன்னொரு பக்கம் காட்டு வழியே பள்ளிக்கு சென்ற சிறுமி பாம்பு கடித்ததாக நம்பப்பட்டு இறக்கிறாள். 

இதுவரையில் எல்லாமே இயல்பாக நடப்பதாக ஊர் நம்பிக் கொண்டிருக்கிற குஷி ரவியும் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ளும்போது தான் இதன் பின்னணிக் காரணம் என்ன என்பது செல்வராகவனுக்குப் புரிகிறது.

அதற்குப்பின் அவர் என்ன நடவடிக்கை எடுத்தார், வில்லனை எப்படிக் கண்டுபிடித்தார்,

அந்த ஊருக்கு எப்படி தெய்வமானார் என்பதெல்லாம் பின் பாதிக் கதையில்.

படு இயல்பாக நடித்து தனது பாத்திரத்தை நிறுவுகிறார் செல்வ ராகவன். மனைவி மீதான அன்பு, ஊர் மக்கள் மீதான கருணை, அக்கா மற்றும் அவரது கணவர் மீதான பாசம் என்று அன்பின் விளை நிலமாக இருக்கும் அவர் வெகுண்டெழும்போது அய்யனாராக மாறுகிறார். 

அவ்வப்போது அவர் போடும் புதிர் கணக்கும், அதை அவிழ்க்கும் அந்தப் பள்ளிக் குழந்தையும் நெஞ்சில் நிறையும் அமசங்கள்.

அறிமுக நடிகை என்றாலும் நாயகியாக இருக்கும் குஷி ரவி நெடுநாள் நமக்கு பழக்கமானவர் போலத் தோன்றியிருக்கிறார். அதற்குக் காரணம் எதார்த்தமாக அவர் நடித்திருப்பதுதான். அழகும் அன்பும் ஒரு சேர அமையப்பெற்ற அவர் வயிற்றில் குழந்தையுடன் மாண்டு போவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா இந்தப் படத்தில் செல்வராகவனின் சகோதரியாக வருகிறார். இந்த ரி என்ட்ரிக்கு அவருக்கு இன்னும் கொஞ்சம் கனமான வேடம் தரப்பட்டிருக்கலாம். 

அவரது கணவராக நடித்திருக்கும் ஆர் எஸ் சதீஷ்க்கும் நடிப்பு எளிதாக கைவரப்பெற்று இருக்கிறது. இன்னொரு பக்கம் செல்வராகவனின் வலது கையாகவும் அவர் செயல்பட்டு அவருக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

நல்லவராக வரும் அமைச்சர் ஒ ஜி மகேந்திராவும், தீயவராக காட்டப்படும் மைம் கோபியும் இடைவேளைக்கு பின் வேறு முகத்தை காட்டுவார்கள் என்று பார்த்தால் அதே முகத்திலேயே பயணிப்பது சற்று வழக்கமான சிந்தனையாக இருக்கிறது.

இவர்களுடன் சிறுமி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட புதுமுகங்கள் சிறப்பாக பங்களித்திரக்கிறார்கள்.

ரவிவர்மனின் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த மீடியம் பட்ஜெட் படத்துக்கு ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, மிக்க பொருத்தமாக இருக்கிறது. கிராமத்தினரின் இயலாமையை படத்தில் உணர முடிகிறது.

அதேபோன்று படம் என்ன சொல்ல நினைகிறதோ அந்த உணர்ச்சிகளை இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் தன் இசையின் வாயிலாகக் கடத்தியிருக்கிறார். பாடல்களும் கவனிக்க வைக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், கிராமங்களில் மட்டுமே உணரப்படும் கந்துவட்டிக் கொடுமை மற்றும் அடிப்படை வசதி இன்மை ஆகிய முக்கிய காரணிகளை கருவாகக் கொண்டு இந்த படத்தைத் தந்திருக்கிறார். இதை கிராமத்தினர் மட்டுமல்லாது நகரத்தில் வாழும் நாமும் புரிந்து கொள்ள முடியும்.

முதல் பாதியில் சாமானியர்களின் வாழ்வில் பாசமும் அன்பும் எத்தனை முக்கியமாக இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருப்பதுடன் இரண்டாவது பாதியில் பிரச்சனை இதுதான் என்று தெரிந்தும் கண்டும் காணாமல் யாரும் இருந்திடக் கூடாது என்கிற செய்தியையும் சொல்லி இருக்கிறார்.

மனிதன் தெய்வமாகலாம் – சாமியான சாமானியன்..!

– வேணுஜி