ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான கெட் அப்பும் அபாரமாக இருக்கிறது. அவரும் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
அவர் மேற்கொண்ட பணியில் தொடர்ந்து பின்னடைவு இருக்க, அதன் பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளியைக் குறிவைத்துப் பிடிக்க அவர் எடுக்கும் சாகசங்களும், அதற்குண்டான எதிர்ப்பை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் கூடவே கிளைமாக்ஸின் நமக்குக் கிடைக்கும் எதிர்பாராத ஆச்சரியமும்தான் படம்.
முறுக்கேறிய உடல் மொழியுடன் ஒருபக்கம் அருண்விஜய் மிரட்ட, அதற்கு நேர் எதிர்த்திசையில் எந்த அலட்டலும் இல்லாமல் சின்ன அலட்சிய முறுவலிலேயே தன் பயங்கரத்தைக் காட்டும் பிரசன்னாவும் அருமையான தேர்வு. பிரசன்னாவின் கண்களே பாதி வசனத்தைப் பேசி தன் கேரக்டரை ஊதித்தள்ள முடிந்த அவரை புகை பிடிக்க வைத்துதான் ‘வில்லன்’ என்று காட்ட இயக்குநர் நினைத்திருக்க வேண்டியதில்லை.
ஆர்ப்பாட்டமில்லாமல் பிற படங்களில் பிரியமான நடிகையாக பவனி வந்த ப்ரியா பவானி சங்கருக்கு இதில் ஆக்ஷன் மேலிட்டு ‘ரிவால்வர் ரீட்டா’ வேடம். கொஞ்சம் காதல் பார்வை பார்ப்பதோடு சரி, அவருக்கு பாடலுக்கோ காதலிக்கவோ வாய்ப்பில்லை. தலைவாசல் விஜய்யும் தன் பாத்திரத்துக்காக ‘உயிரைக் கொடுத்து’ நடித்திருக்கிறார்.
வழக்கமான சினிமாவிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டுமென்பதற்காக வழக்கமான காமெடி, காதல், பாடல்களிலிருந்தெல்லாம் விலக்கு கொடுத்திருக்கும் இயக்குநரின் ரசனை ஓகே. ஆனால், காட்சிகளிலும் புதிதான சிந்தனையை இணைக்க அவர் பழகிக் கொள்ள வேண்டும்.
பாத்திரங்களுக்கேற்ற தீம் இசை வைத்துக்கொண்டு பின்னணி இசையைக் கோர்த்திருக்கும் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்களும் கேட்கலாம் ரகம். .
கோகுல்பினோயின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. காட்சிக்குக் காட்சி விளம்பரப்படம் பார்க்கும் பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார். அங்கங்கே அவர் பயன்படுத்தியிருக்கும் ஹை ஸ்பீட் காட்சிகளும் அதில் அடக்கம்.
ரஜினியே ஆனாலும் முதல் காட்சியில் பில்டப் கொடுத்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்றிருக்க, அருண்விஜய் வரும் காட்சிகளில் எல்லாம் பில்டப் தூக்கலாக இருப்பதைக் குறைத்திருக்கலாம்.
ஆனால், அருண்விஜய் பிரசன்னாவை மனத்தில் பதியுமளவுக்குக் காட்டிய காரணத்தால் கார்த்திக் நரேனை நம் ஹீரோக்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் திட்டமிட்டுப் படமெடுக்கக் கூடியவராக இருப்பதால் ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ‘டிலைட்’டாக அவர் என்றும் இருக்க முடியும். அவருக்குத் தேவை வளமான கற்பனை.
மாஃபியா – மாடர்ன் சினிமா ட்ரீட்..!