திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது.
அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம்.
அதை ஒரு ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன்
பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட விக்ரம் பிரபுவுக்கு அமைந்த அருமையான வேடம் இதில்.
கோபத்தை கூட அமைதியாக காட்டும் வேடம் விக்ரம் பிரபுவுக்கு. ஒரு பெண்ணின் மேல் வைத்த காதல் தோல்வி அடைந்த நிலையில் திருமண ராசி இல்லாதவர் என்று உறவுகளே சொல்லும் வேடத்தில் தைரியமாக நடித்த அவரைப் பாராட்டலாம்.
அதேபோல் நிச்சயிக்கப்பட்ட நாயகி சுஷ்மிதா பட்டும் கை நழுவிப் போய்விட, அவர் தங்கை மீனாட்சிக்கு தான் மீது அரும்பும் காதலை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கும் போதும் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கண்களிலேயே தான் காதல் வேதனையை வெளிப்படுத்தும் சுஷ்மிதா பாட்டின் நடிப்பும் சிறப்பு.
அமைதியான சுஷ்மிதாவின் அழகுக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது மீனாட்சி தினேஷின் வனப்பு. உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பும் ‘ நச்..!’
விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் கஜராஜ், அலப்பறை மாமாவாக வரும் அருள்தாஸ், நண்பனாக வரும் ரமேஷ் திலக் அனைவருமே அவரவர் பாத்திரங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டினின் கண்கவர் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இனிய இசையும் இந்தக் காதல் படத்துக்கு பெருமளவு துணை புரிந்திருக்கின்றன.
குடும்பங்களின் சூழ் நிலை, அவர்களின் எண்ண ஓட்டம் இவற்றை மையமாக வைத்து இனிய குடும்பக் கதையை காதல் உணர்வுடனும், திரைக்கதையை சுவாரசியம் குறையாமலும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஆனால், முன்பாதியில் இருக்கும் சுவாரசியம் பின்பாதியில் குறைகிறது. பின்பாதியில் கதையே இல்லாததால், சத்யராஜை oru சிறப்புத் தோற்றத்தில் வைத்து ஈடு செய்திருக்கிறார்கள். ஆனால், அதுவும் எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை.
இந்தக் குறைகளை மீறியும் குடும்பங்களை வசீகரிக்கும் இந்த லவ் மேரேஜ்..!
– வேணுஜி