மானம் போனால் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் கொண்ட சாமானிய தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
அப்படி வேலை விஷயமாக தோழியை பார்க்க செல்லும் போது மது விருந்தில் கலந்து கொள்ள நேர்கிறது. சும்மா ஒரு ஜாலிக்காக குடிக்கப் போய் அது எல்லை மீறிப் போனதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று விடு கிறது.
அவரது சுயநினைவு இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த சம்பவம் அவர் வாழ்க்கையில் பெரும் இடியை இறக்க… அதை இறக்கி வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்.
இந்த நிலையில் கொரோனா பரவி லாக் டவுன் வந்துவிட அந்த பிரச்சனையில் இருந்து அவரால் மீள முடிந்ததா மானத்துக்கு பயந்த அந்த குடும்பத்தின் நிலை என்ன என்பதெல்லாம் மீதிக் கதை.
ஒரு முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது ஆச்சரியமான விஷயம். சாமானிய குடும்பத்தில் கொஞ்சம் அழகாக பிறந்து விட்ட பெண்ணின் அத்தனை பிரச்சினைகளையும் அவர் எதிர்கொள்வது எதார்த்தம்.
அந்த அழகே அவருக்கு ஆபத்தாக முடிய, அவர் அனுபவிக்கும் ஒவ்வொரு வலியையும், உணர்வுகளையும் தேர்ந்த நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
அவரது அப்பாவாக நடிக்கும் சார்லி நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. அவரது மனைவியாக வரும் நிரோஷா நடிப்பும வெகு இயல்பு.
சார்லி வேலை செய்யும் வெல்டிங் கடை முதலாளி ஆக வரும் லிவிங்ஸ்டன் தன் மகளால் அவமானப்பட்டு கூனிக் குருகும் நடிப்பு நெகிழ வைக்கிறது.
இவர்களுடன் பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
இந்த வாழ்க்கையை ஒரு கேமரா படம் எடுத்திருக்கிறது என்பது தெரியாமல் அத்தனை இயல்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்.
இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜீவா, நேர்த்தியான இயக்குனராக அடையாளம் தெரிகிறார்.
ஆனால் என்னதான் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் நினைவு திரும்பியவுடன் தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை ஒரு பெண் அறிய மாட்டாளா? என்பதுடன் இரண்டு பெண்களைப் பெற்ற ஒரு தாய்க்கு மகளிடம் தெரியும் வித்தியாசம் எதனால் ஏற்படுகிறது என்பதை ஏன் உணர முடியவில்லை போன்ற நியாயமான சந்தேகங்கள் எழவே செய்கின்றன.
இந்தக் குறைகளை எல்லாம் திருத்தி இருந்தால் முழுமையான திருப்தி கிடைத்திருக்கும்.
ஆனாலும் படம் முடியும்போது இயக்குனர் நம்முள் என்ன விதமான உணர்ச்சியை கடத்த நினைத்திருக்கிறாரோ அது நடந்துவிடுகிறது.
லாக்டவுன் – பெண்கள் ஜாக்கிரதை..!
– வேணுஜி