சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.
அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார்.
போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன.
அதில் குமரவேலின் கதையும், குமரனின் கதையும் ஒரு சேர காட்சிப்படுத்தப்படுகின்றன.
குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள் மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் மேல் போலீஸ் கவனம் திரும்ப… அதேபோல் அந்த கதைக்கு இடையே ஒரு இயக்குனராக ஆசைப்பட்டு முயற்சி செய்து கொண்டிருக்கும் குமரன் கதையும், குமரன் எழுதிய கதைகளும், அதில் ஊடாடும் அவரது காதலும் இடையிடையே சொல்லப்படுகிறது.
தலைப்பைப் பார்த்துவிட்டு குமரனை யாரோ சம்பவம் செய்து விட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. குமரனின் கதையைக் கேட்டவர்கள்தான் ‘சம்பவம்’ ஆகிறார்கள்.
இப்படி ஒரு ஜாலியான லைனை நகைச்சுவை ததும்ப சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமான குமரன் தங்கராஜன் நடிப்பைப் புதிதாக கற்க வேண்டியதில்லை. உடற்கட்டை பேணுவதைப் போலவே நடிப்பையும் படு கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
வெளியே தயாரிப்பாளர் எவரும் கிடைக்காத நிலையில் தன் தாத்தா ஜி.எம்.குமாரையே தயாரிப்பாளராக மாற்ற அவர் போடும் திட்டங்கள் எல்லாம் அமர்க்களம்.
நாயகி பாயல் ராதாகிருஷ்ணனும் ஒரு எழுத்தாளராக இருக்க, அவரிடம் குமரனுக்கு முகிழ்க்கும் காதல் இலக்கியமாக இருக்கிறது. ஆனால், குமரவேல் மீது குமரன் கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாக அது பிரேக்கப்பில் முடிகிறது.
அசத்துகிற அழகியாக இல்லாவிட்டாலும் பாயல் நடிக்க தெரிந்தவராக இருப்பதே ஒரு அழகு.
குமரவேல் நடிப்பு பற்றித் தனியாக சொல்ல வேண்டியதில்லை. சமூகச் செயற்பாட்டாளராக சர்வ சாதாரணமாக நடிப்பை சிதறி விட்டுப் போயிருக்கிறார். கடைசியில் அவரை கொன்றது யார் என்று தெரியாமலேயே போக, ‘ தான் எப்படி இறந்தேன்…’ என்பதை அவரே எழுந்து செல்வதாக கதை முடிவது அநியாயத்துக்கு நகைச்சுவை.
பிற பாத்திரங்களில் வருபவர்களில் மெத்தட் ஆக்டராக வரும் வினோத் சாகர் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஒரு சிபிஐ அதிகாரியாக அவர் நிஜத்தில் நடிக்க வேண்டி வர அந்த காட்சிகள் எல்லாம் கலகலப்பின் உச்சம்.
ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் பாலசரவணன் காமெடியை கூட இதில் ரசிக்க முடியாது ஆச்சரியம்.
இவர்களுடன் லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கௌதம் சுந்தர்ராஜன், ஆர் ஜே, சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், வி தாரணி, கவிதா உள்ளிட்டோர் தத்தம் பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்தின் தன்மைக்கு ஏற்ப பயணத்திருக்கின்றன.
படத்தின் அல்டிமேட் ஆன விஷயம் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் எழுதி இருக்கும் உரையாடல்கள்தான். அவரை ‘ஜூனியர் கிரேசி மோகன்..’ என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பொருள் பொதிந்த நகைச்சுவை படம் முழுவதும் இழையோடுகிறது.
நகைச்சுவை மட்டும் அல்லாமல் தத்துவார்த்தமாகவும் எழுதி கவனம் பெறுகிறார் அவர்.
“நீ எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்வரை மற்றவர்கள் உன்னை பற்றி என்ன நினைக்கிறார்களோ நீ அப்படித்தான் இருப்பாய்…” என்ற வசனம் அதற்கு ஒரு உதாரணம்.
சிறந்த நகைச்சுவைப் படமாக இருந்தாலும் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு முழு நீள படமாகத் தருவதில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார் பாலாஜி.
மற்றபடி தலைப்புக்கு பொருத்தமாக குமரன், குமரவேல், ஜி எம் குமார் என்று ஏகப்பட்ட குமார்களை வைத்து ஒரு நகைச்சுவை சம்பவத்தை செய்திருக்கும் அவரை பாராட்டலாம்.
கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் ஜாலியாக ரசித்து சிரித்து விட்டு வர சிறந்த படமாக இதனைச் சொல்லலாம்.
குமார சம்பவம் – சிரி சிரி மூவி..!
– வேணுஜி