இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று பாகிஸ்தானின் குற்றச்சட்டை மறுத்ததுடன். ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.
இந்தியா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற பிரதமர் மோடி “சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது. குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள்..!” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.