எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வருகிறது இப்படம்.
சூரி கதையின் நாயகனாக நடிக்க ‘ கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகன் சூரியன் நாயகி அண்ணா பெண்ணும் இயக்குனர் வினோத் ராஜ் உடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது படம் குறித்து சூரி கூறியது –
“’விடுதலை’, ‘கருடன்’ படங்கள் எனக்கு எப்படி பெயர் வாங்கி கொடுத்ததோ அதை விடப் பெரிய பெயரை ‘கொட்டுக்காளி’ பெற்றுத் தரும். அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படம் இது.
ஆனால், ’விடுதலை’, ’கருடன்’ படங்கள் வசூலித்தது போல் இந்தப் படமும் வசூலிக்குமா? என்று கேட்கிறீர்கள்.
அந்தப் படங்களை இதனுடன் ஒப்பிடக்கூடாது, இந்த படம் வசூல் ரீதியாக எப்படி வருகிறது என்பதை விட மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும். இதில் நடப்பது போன்ற சம்பவம் எல்லா இடங்களிலும் நடந்திருக்கும். அதைக் கடந்தும் வந்திருப்போம், ஆனால் படமாக இந்த கதைக்களம் இதுவரை வந்ததில்லை. எனவே, இதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் எனக்கு காலை 6 மணியளவில் போன் செய்தார், அவர் சொன்ன வார்த்தைகள்…
“உங்களைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, ஒரு நடிகராக விடுதலை படத்தை விட இந்த படம் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும். மேலும், பலமுறை படத்தை நான் பார்த்தேன், உங்கள் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது..!” என்றார்.
கடைசியாக “காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பின்பு ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது, அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாக பயணித்ததால் கிடைத்தது என்று நினைக்கிறேன்…” என்றார்.
நடிகை அன்னா பென் பேசியதிலிருந்து…
“இயக்குநர் வினோத்ராஜ் என்னிடம் கதை சொல்லும் போதே நான் நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். பொதுவாக நான் கதை கேட்டால் ஒரு நாள் எடுத்துக்கொண்டு தான் என் முடிவை சொல்வேன், ஆனால் இந்த படத்தின் கதையை கேட்கும் போதே ஓகே சொல்லிவிட வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன்,
இது ரொம்ப புதிய முயற்சியாக இருந்தது. கலாச்சாரம் சம்மந்தமான கதைக்களம்தான், மதுரை, மொழி என்று குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை பற்றி படம் பேசினாலும், இந்த கதை சர்வதேச அளவிலானது. அதனால் எந்த மொழியில் எடுத்தாலும் இந்த படம் மக்களை சென்றடையும்.
நான் நடித்திருக்கும் மீனா கதாபாத்திரம் பிடிவாதம் பிடித்த பெண் என்றாலும், அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் வித்தியாசமாக இருக்கும். படம் முழுவதும் நான் பேசவில்லை என்றாலும், உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது ஈர்த்த விசயம். அதை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” என்றார்.
இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.