மலையாளத்தில் மட்டுமே சிறந்த படங்கள் வருகின்றன என்று தமிழ் இயக்குனர்கள் எல்லாம் மலையாளப் படம் போன்ற நல்ல படங்களை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு காலம்.
ஆனால் காசு… பணம்… துட்டு… மணி… மணி… என்றாகிப்போன சினிமா உலகில் ஆக்ஷன் படங்களுக்கே வருமானம் பெரிய அளவு வருகிறது என்பதற்காக மலையாளப் படங்களும் தமிழ் படங்களைப் பார்த்து ஆக்ஷன் சூடு போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டன. அதன் ஒரு வடுதான் இந்தப் படம்.
அருமையான படங்களில் அற்புதமான பாத்திரங்களை ஏற்று நடித்த நடித்து வந்த துல்கர் சல்மான் இந்த படத்தில் முழுக்க ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
எண்பதுகளில் நடக்கும் கதையான இதில் கடற்கரைப் பிரதேசமான கொத்தா என்ற நகரம் ரவுடியிசத்தால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த கொத்தாவை ஆண்டு கொண்டிருப்பவர் தாதாவான துல்கர் சல்மான். சிறுவயதில் இருந்து இணைபிரியாத அவரது நண்பரான ஷபீரும் உடன் இருக்க அவர்களுக்கென்று சில கொள்கைகள் கோட்பாடுகள் வைத்துக் கொண்டு தாதாயிசத்தில் திளைத்திருக்கிறார்கள்.
இதைக் கண்டு இவர்களுக்கு போட்டியாக இருக்கும் குழுக்கள் சும்மா இருக்குமா..? இன்னொரு கஞ்சா விற்கும் கோஷ்டியைச் சேர்ந்த செம்பன் வினோத் இவர்கள் நட்புக்கிடையே ஒரு பகைத்தீயை மூட்டி விட்டு அதன் காரணமாக துல்கர், கொத்தாவை விட்டு வெளியேறுகிறார். இப்போது தாதாயிஸம் முழுதாக ஷபீர் கைக்கு வந்துவிட அவர் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிடுகிறது.
அங்கிருந்துதான் படம் தொடங்குகிறது. அந்த கொத்தாவுக்கு புதிதாக பொறுப்பேற்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரான பிரசன்னா, ஷபீரின் தாதாயிசத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் திணறி ஒரு சூழ்ச்சியாக நகரை விட்டு வெளியேறிய துல்கர் சல்மானை மீண்டும் அங்கு வரவழைக்கிறார்.
இரு அம்புகளையும் மோத விட்டால் ஒரு அம்பு முறிந்துவிடும் என்று நம்பும் அவரது சூழ்ச்சி வெற்றி பெற்றதா, மீண்டும் சந்தித்த நண்பர்கள் இணைந்தனரா அல்லது பகை கொண்டனரா என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.
என்னதான் முரட்டுத்தனமாக சண்டை எல்லாம் போட்டாலும் இந்தப் படத்தின் ஆக்ஷன் ஹீரோ பாத்திரம் துல்கர் சல்மானுக்கு பொருந்தாத சட்டையாகவே இருக்கிறது. ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான மாஸ் அவரது அறிமுகக் கட்சியிலேயே தொடங்கி விட வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் துல்கரின் எதார்த்தமான நடிப்பு அந்த தாதாயிசத்துக்கு சற்றே தள்ளியே இருக்கிறது.
ஆனால் அங்கங்கே காதல், தாயன்பு, நட்பு என்றெல்லாம் உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடத்தில் துல்கர் ஜெயித்து விடுகிறார்.
அத்தனை பெரிய ரவுடி, ஐஸ்வர்யா லட்சுமியின் காதலில் கட்டுண்டு கிடப்பதும், அது தொடர்பான காட்சிகளும் கவிதையாக இருக்கின்றன.
அவரது நண்பராகவும் பின்னர் வில்லனாகவும் வரும்… நமக்கு டான்சிங் ரோஸாக நன்றாக அறிமுகமான ஷபீர்தான் நடிப்பில் கோலோச்சுகிறார். அந்த ஒன்றரைக் கண்ணில் அத்தனை வில்லத்தனங்களையும் காட்டி அசால்டாக இடை இடையிடையே கால்பந்துமாடி ரசிக்க வைக்கும் ஷபீர் தனது மனைவியின் அழகில் எப்போதும் விழுந்து கிடக்கிறார்.
அப்பேர்ப்பட்ட அழகியாக நைலா உஷா உண்மையிலேயே ஜொலிக்கிறார். அந்தப் பாத்திரத்துக்கான மேக்கப்பில் கொஞ்சம் வில்லத்தனத்தையும் காட்டி இருப்பது பாராட்டுக்குரியது.
படமே கொத்தாவுக்கு வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரான பிரசன்னாவில் இருந்து தான் தொடங்குகிறது. பிரசன்னாவும் தன் பாத்திரத்தை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் வில்லனை ஒரே நகர்த்தலில் வெற்றி கொள்ள நினைத்து துப்பாக்கியைத் தூக்குபவர், தன் குடும்பம் பற்றி வில்லன் சொல்லி மிரட்டியதும், பொசுக்கென்று துப்பாக்கியைக் கவிழ்த்துக் கொண்டு திரும்புவதில் அந்தக் கேரக்டரும் கவிழ்ந்து விடுகிறது.
ஒரு சரித்திரமாக இந்தப் படத்தை தந்து விட வேண்டும் என்கிற முனைப்பில் இந்த பட இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயங்கியிருந்தாலும்- அந்த நேர்த்தியை படத்தில் கொண்டுவர முடிந்திருந்தாலும், திரைக்கதை மிகவும் இளைத்து இருக்கிறது.
எளிதாக யூகிக்கக்கூடிய அரிச்சுவடிக் காட்சிகள் படத்தை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன.
படத்தில் ஏதாவது ஒரு காட்சி புதிதாக இருக்கிறதா என்றால் எல்லாமே இதுவரை நாம் படத்தில் பார்த்து சலித்த காட்சிகளாகத்தான் இருக்கின்றன.
ஆக…
கொத்தா – இன்னும் இருந்திருக்கலாம் கெத்தா..!