இந்தியாவெங்கும் கிறிஸ்துமஸ் வெளியீடாக ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது கன்னட முன்னணி நட்சத்திரமான யாஷ் நடித்திருக்கும் ‘கேஜிஎஃப்’. இதனை தமிழில் வெளியிடும் விஷால் இன்று யாஷை அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் கலந்து கொண்டார்.
அதில் பேசிய விஷால், “இந்தப்படம் ‘பேன் இன்டியன் மூவி’யாக ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. அதனாலேயே ஒரே டைட்டிலாக கேஜிஎஃப் என்றே வைக்கப்பட்டிருக்கிறது. இது பாகுபலியைப் போல் பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழில் சரியான படத்தில் அறிமுகமாகி விட்டால் இங்கு ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். யாஷுக்கு அப்படி ஒரு படமாக இது அமையும் என்பதால் யாஷும் இங்கு முன்னணிக்கு வந்து விடுவார்.
என்னை இதே இடத்தில் (சென்னை கிரீன் பார்க் ஹோட்டல்) வைத்துதான் என் அப்பா அறிமுகப்படுத்தினார். அதேபோல் யாஷை நான் இங்கே அறிமுகம் செய்கிறேன்..!” என்று கூறி யாஷை கட்டித்தழுவி அறிமுகப்படுத்தினார்.
யாஷ் பேசுகையில், “சினிமாதான் இங்கே கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் சாதனமாக இருக்கிறது. முன்னர் நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள அப்போது வந்த படங்களைப் பார்த்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
நான் கர்நாடகத்தில் இருந்தாலும் நிறைய தமிழ்ப்படங்களைப் பார்க்கிறேன். நான் தமிழ் கற்றுக்கொண்டதே தமிழ்ப்படங்களைப் பார்த்துதான். எல்லைகள் என்பது நிர்வாகத்துக்குதானே தவிர மக்கள் எப்போதும் ஒன்றுபட்டுதான் இருக்கிறார்கள்.
வேறு மொழியைச் சேர்ந்த நடிகராக இருந்தாலும் அவரைப் பிடித்துவிட்டால் இங்கே கொண்டாடுகிறார்கள். அங்கே மொழி கலாச்சாரம் எல்லாம் தள்ளிப்போய் விடுகிறது. எப்போதும் நல்ல நோக்கத்துக்கே உழைக்கும் விஷால் கையினால் இந்தப்படம் வெளியாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்..!” என்றார்.
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷ், “கன்னடப்படவுலகில் தமிழ்ப்படங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்னால் முடிந்த அளவுக்கு அதைத் தீர்க்கப் பாடுபடுவேன். ஆனால், இதெல்லாம் தற்காலிகமானதுதான். ஆரோக்கியமான மாற்றம் வந்து கொண்டிருக்கிறது…” என்றும் “உங்களைப் போலவே நானும் விஷால் சீக்கிரம் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்..!” என்று கூறினார்.