நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில்.
இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சாதி வெறி மற்றும் பதவி வெறி பிடித்த அருள்நிதியின் தந்தை யார் கண்ணனுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் தன் மகன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ராஜ சிம்மன் மாவட்ட செயலாளர் ஆக மாற, அதையும் தாண்டி மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் சந்தோஷ் பிரதாப்பும், அருள் நிதியும் சேர்ந்து செய்த ஒரு வேலை அவரது மாவட்ட செயலாளர் பதவியையே பறிக்கிறது. இதில் கொதிப்படையும் ராஜ சிம்மன் இந்த இரு நண்பர்களுக்கு என்ன துன்பங்களைக் கொடுத்தார் – அந்த துன்பங்களில் இருந்து அவர்கள் வெளிவர முடிந்ததா என்பதே இந்தப் படத்தின் கதை.
ஓங்குதாங்கான அருள்நிதிக்கு இந்த அய்யனார் மீசையும் கூட மிகப் பொருத்தமாக இருக்கிறது. அவரது குரலும் கம்பீரமாக இருக்க பத்து பேர் வந்தாலும் அவர்களைத் தூக்கி போட்டு மிதிக்கும்போது நம்பகமாகவே இருக்கிறது.
அப்படிப்பட்ட வீரம் பொருந்தியவரை “என் கண்ணை சிமிட்டாமல் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிரு…” என்று சொல்லியே காதலில் கவிழ்க்கும் துஷாராவின் பார்வை கட்டிப் போடுவது ரசமான ரசனை.
துஷாராவுடன் காதல் வயப்படும் காட்சிகளிலும் அருள்நிதி சிறப்பாக செய்திருக்கிறார். நண்பன் சந்தோஷ் பிரதாப்புக்கு ஒன்று என்றால் முதலில் நிற்கும் ஆளாக அவர் வருவது நட்புக்கு சிறந்த இலக்கணமாகவும் இருக்கிறது.
தந்தையே ஆனாலும் அவர் செய்தது தவறுதான் என்று தண்டிக்கும் வேலையில் உயர்ந்து நிற்கிறார் அருள்நிதி. அதேபோல் காரில் வைத்து வில்லனுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் காட்சி அவரது ஆக்ஷனில் அல்டிமேட்.
நாயகியாக வரும் துஷாரா விஜயன் வரும் காட்சிகள் எல்லாம் அத்தனை இளமையும் குறும்பும் நிறைந்திருக்கின்றன. அருள் நிதியை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பதும் பார்வையை காட்டிய அவரை வசியப்படுத்தும் நடிப்பிலும் பின்னியிருக்கும் துஷாராவிடம் பிற நாயகிகள் மட்டுமல்ல நாயகர்களும் உஷாராக இருக்க வேண்டும்.
சமீபகால படங்களில் சிறப்பான வேடங்கள் ஏற்று வரும் சந்தோஷ் பிரதாப்புக்கு இன்னும் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தப் படத்திலும் தாழ்த்தப்பட்டிருக்கும் தன் சமூகத்தை உயர்த்திப் பிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்வதிலும் மிளிர்கிறார் சந்தோஷ்.
அவரது காதலியாக வரும் சாயா தேவியின் பார்வையும் நடிப்பும் கூட பரவசப்படுத்துகிறது. எதிர்பாராமல் சந்தோஷுக்கு நிகழும் மரணத்தில் சாயாதேவியின் உணர்ச்சிகரமான நடிப்பு அதிசயிக்க வைக்கிறது.
அருள்நிதியின் ஆபத்துக் காலங்களில் அவருக்கு உதவி செய்யும் ஒரே நட்பாக வரும் முனிஷ் காந்த் ராமதாஸ் முன் பாதியில் சிரிக்கவும், பின் பாதியில் ரசிக்கவும் வைக்கிறார்.
குறிப்பாக விசாரணைக்கு அழைத்த போலீஸ் எஸ்.பியிடம் அவர் பேசிவிட்டு வரும் ஒரு காட்சியில் தியேட்டர் கைதட்டல்களால் அதிரும்.
அருள்நிதி மேல் வன்மம் கொண்டு அவரை பிடித்துப் போட காத்திருக்கும் இன்ஸ்பெக்டராக வருபவரின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. உட்கார்ந்த இடத்திலிருந்து இன்ஸ்பெக்டரை ஏவி விட்டு உண்மைகளை கண்டுபிடிக்கும் எஸ்பியாக வரும் சரத் லோகித்ஸ்வாவும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக வரும் ராஜ சிம்மனும் மிரட்டி இருக்கிறார். அவருடைய முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது முதலிலேயே தெரிந்து விடுவது படத்தின் சிறு சறுக்கல். இப்படியா கிளைமாக்ஸை தலைப்பிலேயே சொல்லிவிடுவார் இயக்குனர்?
டி.இமானின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அதேபோல் பின்னணி இசையையும் உணர்ச்சிக்குத் தக்கவாறு இசைத்திருக்கும் இமான், திரைக்குப் பின்னால் இருக்கும் நாயகனாகி இருக்கிறார்.
கிராமத்து சாலைகளில் கார்களும் பைக்கும் துரத்தும் சேசிங் காட்சியை அற்புதமாகப் படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர், கிராமத்து வாழ்வியலை கச்சிதமாகச் சுருட்டி கொண்டு வந்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட பிரிவுக்குள்ளும் இருக்கும் பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். அதேபோல் சந்தோஷ பிரதாப்பின் முயற்சியால் உயர் பதவிக்கு வந்த சிறுபான்மையினர், அவரது மரணத்துக்கு வந்து பறையடித்து அஞ்சலி செலுத்தும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.
உடன் இருப்பவனே எட்டப்பன் ஆவான் என்கிற இலக்கணம் மாறாமல் அருள்நிதிக்கு உதவும் ஒருவரே அவரை காட்டிக் கொடுக்க முன்வருவதும், அதற்குப் பின்னால் இருக்கும் எதிர்பாராத திருப்பத்திலும் கூட இயக்குனர் முத்திரை பதிக்கிறார்.
படத்துக்கு வசனங்கள் மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி உரையாடல் ரசிக்க வைத்திருக்கிறது.
கழுவேத்தி மூர்க்கன் – அப்பனுக்கே பாடம் கற்பித்த சுப்பன்..!
– வேணுஜி