உலக இதய தினத்தை முன்னிட்டு
வடபழனியில் காவேரி மருத்துவமனை சார்பில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடக்கம்
சென்னை,செப்.29: உலக இதய தினத்தை நினைவுகூரும் வகையில், காவேரி மருத்துவமனை வடபழனியில் இருதய சிகிச்சையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்ட அதிநவீன வசதிகளை கொண்ட காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டை தொடங்கியுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி முன்னிலையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களால் இந்த இன்ஸ்டிடியூட் தொடங்கி வைக்கப்பட்டது.
வடபழனி காவேரி மருத்துவ மனையின் இதயநோய் நிபுணரும் இதயநோய் மருத்துவ மூத்த ஆலோசக ருமான ஜோதிர்மயா தாஷ், வடபழனி காவேரி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் இருதய நோய் நிபுணருமான டாக்டர் வி. மகாதேவன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் திறமையான இருதய நிபுணர்களின் வழிகாட்டுதல் குழுவோடு இயங்கும். சர்வதேச தரத்தில் மிக உயர்வான மற்றும் விரிவான இருதய சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக இது கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இதயம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல், மற்றும் தடுப்பதற்கான மையமாகச் செயல்படும். நிபுணர்கள் குழுவிடமிருந்து நோயாளிகள் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை இந்த மையம் உறுதி செய்யும்.
இந்நிறுவனத்தில் மேம்பட்ட இருதய MRI மற்றும் CT ஸ்கேனர்கள் உட்பட சமீபத்திய கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதயத்தின் தற்போதைய நிலையை துல்லியமாகவும் முன்கூட்டியே கண்டறியவும் இந்த சாதனங்கள் உதவும். இருதயத்திற்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் குழாய்களில் உள்ள பாதிப்புகளை கண்டறியும் ஒரு பிரத்யோக ஆய்வகம், சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய அனுபவம் வாய்ந்த இருதயநோய் நிபுணர்களைக் கொண்டுள்ளது.
கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங் (சிஏபிஜி), வால்வு மாற்றுதல், பேஸ்மேக்கர் (இதயமுடுக்கி) பொருத்துதல் மற்றும் குறைந்தபட்ச தலை யீட்டு சிகிச்சை நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இதய அறுவை சிகிச்சைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் குணமடையவும் இதய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் ஒரு விரிவான இருதய மறுவாழ்வுத் திட்டத்தை இந்த மையம் கொண்டுள்ளது.
இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல்நலப் பரிசோதனைகள், வாழ்க்கை முறை மாற்ற வழிகாட்டுதல்கள் மூலம் இதய நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை இருதய துறை ஏற்படுத்துகிறது.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், அனைவருக்கும் உயர்தரமான மருத்துவ சேவையை வழங்கவேண்டும் என்ற எங்களது நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் “காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்” தொடங்கப்பட்டுள்ளது என்றார். உலக அளவில் இதய நோய் அதிகரித்து வருவதால் இதய ஆரோக்கியத்திற்கான முழுமையான சிகிச்சைக்கான அணுகுமுறையை அக்கறையுடன் வழங்குவதை எங்கள் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த இருதய சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் மிகச்சிறந்த மையங்களில் ஒன்றான இருதயவியல் மையத்தை வடபழனியில் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது காவேரி குழும மருத்துவமனைகளில் எங்களின் சமீபத்திய சேர்க்கையாகும்.
ஹார்ட் இன்ஸ்டிடியூட் திறப்பு விழா நடைபெறும் இந்த தருணத்தில் டாக்டர் ஜோதிர்மயா தாஷ், டாக்டர் மகாதேவன் மற்றும் குழுவினரை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் நிகழும் உயிரிழப்புகளில் இருதய நோய்களே முக்கிய காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 80விழுக்காடு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய அளவில் தடுக்க முடியும்.
தடுப்பு மற்றும் ஆரம்பகால நோயறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, இம் மருத்துவமனை 2023 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை ECG, ECHO மற்றும் மருத்துவர் ஆலோசனையை உள்ளடக்கிய இலவச இருதய சிகிச்சை முகாமையும் நடத்துகிறது. இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்.
ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை எலியட்ஸ் பீச் ரோடு பெசன்ட் நகரில் 2 கிமீ வாக்தன் மற்றும் ஜூம்பா ஆகியவை ஆரோக்கியமான இதயத்திற்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
இதய நோய்களைத் தடுப்பதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் மற்றும் இருதய அவசர காலங்களில் சரியான நேரத்தில் நோய் கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மைம் ஷோ நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
மாரடைப்பு மற்றும் AED பயன்பாடு பற்றி மருத்துவமனை அறிவுறுத்தியது, 200க்கும் மேற்பட்டோர் இதில்கலந்து கொண்டனர்.