October 16, 2025
  • October 16, 2025
Breaking News
May 1, 2019

ஆர் கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் சந்தானம்

By 0 900 Views

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’.

கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமாக அது அமைகிறது. ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பின் சந்தானம் நாயகனாகும் இந்தப்படம் அட்டகாசமான காமெடி கலாட்டாவான படமாக இருப்பதுடன், ஆக்‌ஷனும் கலந்து கட்டி இருக்குமாம்.

இது குறித்து ஆர்.கண்ணன் கூறும்போது, “என் முதல் படமான ‘ஜெயம் கொண்டானி’லிருந்தே என்னுடன் பயணித்து வரும் சந்தானம் ‘கண்டேன் காதலை’ படத்தில் அதிரி புதிரியான காமெடியில் கலக்கி இருந்தார். 

அதற்குச் சற்றும் குறைவில்லாத காமெடி கொண்ட இந்தப்படத்தின் கதையை அவரிடம் விளக்கியபோதே விழுந்து விழுந்து சிரித்து ரசித்தபடி கேட்டார். அவருடைய நடிப்பும் இணையும்போது அந்தக் காமெடி எப்படி அமையுமென்று சொல்லத் தேவையில்லை..!” என்றார்.

முன்னணி நடிகை மற்றும் முன்னணிக் கலைஞர்களுடன் இந்தப்படத்துக்கான பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. ஜூலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரே மூச்சில் முடிவடைந்து இந்த வருட டிசம்பரில் திரையைப் பார்க்கவிருக்கிறது.

ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸு’டன் இந்தப்படத்தை இணைந்து தயாரிக்கிறது எம்.கே.ராம்பிரசாத்தின் எம்கேஆர்பி புரடக்‌ஷன்ஸ்.

கலக்குங்க கண்ணன்..!