நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
Kanaa Success Meet
விழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து…
“நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்ததுதான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம்தான் இது. ஆனாலும் வெற்றியை எட்டக் காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்தான் – அவர்களுக்கு நன்றி.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’; எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். ‘திபு நினன் தாமஸ்’ இசை படத்துக்குப் பெரிய பலம். வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் ஐஸ்வர்யா. 20 மேட்ச்க்கான காட்சிகளைப் படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர்.
என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. ‘அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா…’ என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன்.
இந்தப் படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம்..!”
Kanaa Success Meet