சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தில் அவரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று டிரைலரைப் பார்த்தால் புரிகிறது. ஆனால், அது வெறும் சிறப்புத் தோற்றமல்ல…” என்று சொல்லும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அது பற்றி விளக்கினார்.
“இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் ‘கனா’வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார்.
ஆனால் இறுதியாக அவர்தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
‘கனா’வின் மையக்கரு பற்றி அவர் கூறும்போது, ” கனாவை பெண்களை மையப்படுத்திய ஒரு படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, அது அனைத்துக்குமானது. ‘கனவு’ மற்றும் ஆசைகள் அனைவருக்க பொதுவானது அல்லவா, அதுபோலவே இதுவும் உணர்வுகள் அடங்கிய குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.
முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிக்கட்டும் அருண்ராஜா காமராஜ்