கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர்.
அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
“ஓர் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி இருப்பவர்கள் வேலையைப் பறிக்கக்கூடாது. கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் செவிலியர்கள் மகத்தான பணி மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில், அவர்கள் வேலையைப் பறிப்பது தவறான செயல். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஆதரவாக உங்களின் மனத்தின்மையை அதிகப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். அரசின் தாமதிக்கப்பட்ட நீதி… தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது! செவிலியர்களாகிய உங்களுடன் உங்களுக்காக என் குரலும் எப்போதும் ஒலிக்கும்.
கொரோனா தொற்றின் ஆவேசம் இன்னும் குறையாத நிலையில், உங்கள் அனைவரையும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி, உங்களுக்கு எனது வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று பேசினார் கமல் ஹாசன்.