ஆளே மாறிவிட்ட நடிகர் பரத் இப்போது உடல் வலிமையுள்ள ஹீரோக்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வேடங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.
அப்படி அவர் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. டைட்டிலைக் கேட்டதும் அவர் ‘மகாகவி’யாக வருவாரோ என்று அஞ்சத் தேவையில்லை. அவர் இதில் உண்மைகளைக் கண்டறியும் ஒரு காவல்துறை அதிகாரியாக வருகிறார்.
இதில் பரத் கதாநாயகனாக அவருக்கு ஜோடியாக கேரள வரவு ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்க, வேல்ராஜிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்திருப்பவர் விஷால் சந்திரசேகர்.
தினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன் இணைந்து தயாரித்திருக்கும் ‘காளிதாஸ்’ திரைப்படம், வரும் 13ம் தேதி உலகெங்கும் 300க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.
படத்தின் இயக்குநர் ஸ்ரீசெந்திலிடம் படம் குறித்துப் பேசியபோது…
“நம்முடைய மூன்றாவது கையாகிவிட்ட கைபேசியினால் குடும்பத்திற்குள் , பணியிடத்தில் என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்கிறது. அப்படிப்பட்ட கைபேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக்கூடிய சைபர் க்ரைம் ஒன்றையும், அதனை தொடர்ந்து நடக்கக்கூடிய தொடர் கொலைகளையும் பின்னி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன்.
இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இப்படம் பேசும்.
இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ், இப்படத்தின் க்ளைமாக்ஸை யூகிக்க முடியாது என்பதுதான். இப்படத்தின் சிறப்பு காட்சியை சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு திரையிட்டோம். அப்படத்தை ‘தடம்’, ‘ராட்சசன்’, ‘ஜிவி’ போன்ற படங்களை ஒப்பிட்டுப் பாராட்டினர்..!” என்றார்.
சினிமா ரயிலில் மிடில் பர்த்தில் பயணம் செய்யும் பரத்துக்கு இப்படம் அவரை அப்பர் பர்த்தில் ஏற்றிவிடும் என்று நம்பலாம் போலிருக்கிறது..!
அவர் அதற்குக் தகுதியானவர்தானே..?