இந்தத் தலைப்பு உங்களுக்கு ஒரு தமிழக அரசியல் பிரமுகரை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்லி தப்பித்து விட முடியாது. காரணம், அந்த பிரமுகர் வாழ்விலிருந்து பெறப்பட்ட சம்பவங்கள்தான் கதை என்று சொல்லப்படுவதுடன் இந்த கம்பெனியின் பெயரும் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் ஆக இருப்பது.
நீங்கள் மட்டுமல்ல, எல்லோரும் நினைக்கும் விஷயம்தான் கதைக்களம். ஆனால் காடுவெட்டி என்றால் காடுகளை வெட்டிக் குவிப்பவர் என்று அர்த்தம் அல்ல அது ஒரு நிலப்பரப்பின் பெயர் என்று ஆரம்பத்திலேயே புரிய வைத்து விடுகிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.
அந்தப் பரப்பில்… காதல் என்கிற இயல்பான மனித உணர்வு எப்படி எல்லாம் அரசியல் படுத்தப்படுகிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்.
இதிலும் நாடகக் காதல் என்று வர்ணிக்கப்படும் காதல்தான் கதைக்களம். ஒரு குறிப்பிட்ட இன பெண்களை வேறு இன ஆண்கள் காதல் என்கிற பெயரில் வளைத்து போடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
இன்னும் கேட்டால் மேற்படி நாடகக் காதல் நிகழ்த்தும் இனத் தலைவரே அப்படிக் காதல்களைக் காசு கொடுத்து நிகழ்த்தச் சொல்கிறார் என்றே நேரடியாகக் குற்றமும் சாட்டுகிறார் இயக்குனர்.
அப்படி நடக்காமல் தடுக்க விரும்பும் இனக் குழுவின் ஒரு தலைவராக நடு நாடான் என்கிற ஆர்.கே.சுரேஷ் இருக்கிறார். அவர்தான் படத்தின் நாயகன். அவர் எப்படித் தங்கள் இனத்தின் மீது பற்று கொண்டு உணர்வு ரீதியாகத் தாக்குதல் நடத்துபவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடத்துகிறார் என்பது கதை.
ஆர்.கே சுரேஷின் முரட்டுத்தனமான உடல் வாகுக்கேற்ற வேடம் என்பதால் அப்படியே நடித்துத் தன் பங்கை நிறைவு செய்கிறார் அவர். இதற்குப் பிறகு இவர் நடிக்கக்கூடிய படங்களில் இதே மஞ்சள் சட்டை தொடருமா என்பது முக்கிய கேள்வி.
மேற்படி இனத்தின் பெருந்தலைவராக ஏ.எல்.அழகப்பன் வருகிறார். அவருக்கு ஒரு அரசியல் தலைவராக நடிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. அத்துடன் இன்னொரு வாழும் தலைவரை நினைவுபடுத்தும் விதத்தில் நடித்திருப்பதிலும் ஆச்சரியம் இல்லை.
ஆர்கே சுரேஷின் மனைவியாக விஷ்மியா பொருத்தமாக இருக்கிறார்.
சுப்பிரமணிய சிவாவுக்கு அழுத்தமான வேடம். பெற்ற மகளுக்கே உணவில் விஷம் வைக்கும் அளவுக்கு அவர் போய் விட்டாலும் அதற்கடுத்த நிகழ்வுகளில் மனம் கலங்க வைக்கிறார்.
சங்கீர்த்தனா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா உள்ளிட்டோர் பிற பாத்திரங்களில் வருகிறார்கள்.
பாடல்களுக்கான இசையமைத்திருக்கும் சாதிக் எதிர்காலத்தில் சாதிப்பார் என்று நம்பலாம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் திருப்திகரமாக உள்ளது.
புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை கூட்டி இருக்கிறது.
ஆனால் உரையாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதில் சற்று இயக்குனருக்கு குழப்பம் இருப்பதாக தெரிகிறது கிளைமாக்சையும் மாற்றி அமைத்திருக்க முடியும்.
ஒட்டுமொத்தப் படத்தில் நாம் புரிந்து கொள்வது நகர்ப்புறத்தில் நாம் பார்ப்பது போல காதல் பிரச்சனைகள் கிராமப்புறங்களில் இலகுவாக இல்லை என்பதுதான்.
காடுவெட்டி – இனக் காவலன்..!