சினிமாவே தொழில் என்று ஆகிப்போனவர்கள் எடுக்கும் சினிமா ஒரு வகை. நாமெல்லாம் சினிமாவுக்குள் வந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறவர்கள் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தங்கள் ஆசைக்காக ஒரு படம் எடுத்து விடுவது இன்னொரு வகை. இது இரண்டாவது வகையில் அமையும் படம்.
இந்த இரண்டாவது வகைப் படம் எடுப்பதுதான் ஆனாலும் கடினமான காரியம். ஹீரோவாக ஆசைப்படும் ஒருவரை வைத்துக்கொண்டு அவர் தாங்கக் கூடிய கதையைத் தயார் செய்து அதில் வழக்கமான சினிமா சென்டிமென்ட் மற்றும் கமர்ஷியல் ஐட்டங்கள் எல்லாவற்றையும் புகுத்தி அதைப் படமாக உருவாக்குவது ஆகப்பெரிய வேலை.
அப்படி எம்.ஆர்.தாமோதருக்காக ஒரு கதையைத் தயார் செய்து இயக்கியிருக்கிறார் சலங்கை துரை. நடிகர் கரண் இரண்டாவது சுற்று வரக் காரணமாக இருந்த காத்தவராயன் மற்றும் அறிமுக நாயகனான கதிர் நடித்த காந்தர்வன் போன்ற கவனிக்க வைத்த படங்களைத் தந்தவர் இவர்தான் என்பதால் இந்த படமும் கவனிக்க வைக்கிறது.
அம்மா பிள்ளையாக வளரும் தந்தையில்லாத தாமோதர் வசம் கடத்தல் கும்பல் ஒன்றால் கடத்தப்படும் குழந்தை வந்து சேர, அந்தக் குழந்தையை உரியவர்களிடம் சேர்க்க நினைக்கிறார்.
ஆனால் கடத்தல் கும்பல் குழந்தையின் கோடீஸ்வரத் தந்தையிடம் பெரிய பணம் பேரம் பேசிக் கொண்டிருப்பதால் இப்போது குழந்தையைக் கையில் வைத்திருக்கும் தாமோதர்தான் கடத்தியவர் என்று நினைத்துக் கொண்டு போலீஸ் ஒரு பக்கமும், கடத்தல் காரர்கள் ஒரு பக்கமாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவரும் நண்பருமாகச் சேர்ந்து அந்த குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்ததா என்பதுதான் கதை.
இந்தக் கதைக்குள் அம்மா சென்டிமென்ட், நட்பு, நட்பின் துரோகம், காதல், தியாகம் என்று சினிமா ரசிகர்களின் அத்தனைத் தேவையையும் உள்ளே வைத்து ஒரு ஸ்வீட் பீடாவாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் சலங்கை துரை.
நாயகன் தாமோதருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை கண்களில் தெரிகிறது. ஆனால் முகத்தில் முக்கால்வாசி தாடியே அடைத்துக் கொள்ள அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். தாய்ப் பாசக் காட்சிகளில் தயக்கம் இல்லாமல் நடிக்க முடிந்த அவருக்கு காதல் காட்சிகளில் பதட்டம் இருப்பது புரிகிறது.
அவர் பதட்டத்தைக் குறைக்க வேண்டிய இயக்குனரோ இரண்டு கதாநாயகிகளை வைத்து ஆளுக்கு ஒரு முத்தம் வேறு கொடுக்க வைத்து அவரை விழி பிதுங்க வைத்திருக்கிறார்.
விதிஷா, ரியா இரண்டு நாயகிகளில் இரண்டாவது நாயகியாக வரும் ரியா அதிகமாகவே கவனிக்க வைக்கிறார். அந்தத் துடிப்பான நடிப்பு, ரியாவை ஹீரோயின் ஏரியாவில் களை கட்ட வைத்து இருக்கிறது.
தாமோதர் விதிஷாவிடம் காதல் வயப்பட்டு விட்ட விஷயம் தெரிந்த ரியா, “நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட நான் உங்க ரெண்டு பேருக்கும் குறுக்கே வந்து படுத்துக்குவேன்..!” என்கிற அளவுக்கு காதலில் வலுவாக இருக்கிறார்.
பேசாமல் அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்டு அம்மா சொல்படி வாழ்ந்திருந்தால் தாமோதரின் வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கும்.
அங்கங்கே கலகலப்புக்கு உதவுகிறார் சிங்கம் புலி. ஹோட்டலில் கையில் காசு இல்லாமல் சிற்றுண்டி சாப்பிட முடிவெடுக்கும் அவர், “சப்பாத்தி சாப்டா இருக்காது..!” என்று சர்வரிடம் கட்டும் பந்தயம் காமெடியில் ஹை லைட். மற்றவை எல்லாம் லோ லைட் காமெடி தான்.
தாமோதரின் அம்மாவாக வரும் சுதா, விதிஷாவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, அம்மா பாக்யஶ்ரீ, சிங்கம் புலியின் கல்யாணம் செய்து கொள்ளாத மனைவி கம்பம் மீனா போன்றவர்கள் ஏற்கனவே நடிப்பு அனுபவம் பெற்றவர்கள் என்பதால் எளிதாக தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து விடுகிறார்கள்.
ஆனால், நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்கள், ‘மதுரை முத்து’ உள்ளிட்ட வில்லன்கள், ஒட்டுமொத்த போலீஸ் டீம் அனைவருமே புதுமுகங்கள் என்பதால் அவர்களை இயல்பாக நடிக்க வைப்பதில் இயக்குனரின் வேலை அதிகமாகவே இருந்திருக்கிறது.
கடத்தப்பட்ட குழந்தை தருண் கவனிக்க வைக்கிறான். அந்த வயதில் சொல்வதைச் செய்வதே பெரிய விஷயம்.
எம்.ஸ்ரீகாந்த் இசையில் பாடல்களும், ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.
கடத்தல் – புதுமுக ஹீரோவை வைத்து இரண்டு மணி நேரத்தைக் கடத்தியதே பெரிய காரியம்..!