கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக, ராஜேஷ் எம்.செல்வா இயக்குவது தெரிந்த செய்தி… இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல் பேசியதிலிருந்து…
“ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனிக்கு முதலில் ராஜ்கமல் என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என் முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ‘ஊபர்’ வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவக்கினோம்.
விக்ரம், சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கிறேன். ‘சேது’ இன்னும் பல காலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ‘கடாரம் கொண்டான்’ படத்தை நான் பார்த்தேன். கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன்.
ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது எல்லாமே அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை ‘கே.கே விக்ரம்’ என்று அழைப்பார்கள். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும்.
ஜுலை 19-ஆம் தேதி சந்தோஷமான நாள். அன்று ‘கடாரம் கொண்டான்’ வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகு பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார் சிவாஜி. ரசிகர்கள் நல்ல படத்தைக் கொண்டாட வேண்டும்.
விக்ரம் சொன்னார் இந்தப்படம் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்று. அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலத்தான் வந்திருக்கிறது. இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது..!”